2019ல் ஒரு 2000 ரூபாய் நோட்டுக் கூட அச்சிடப்படவில்லை: ஏன் தெரியுமா?

2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்திவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது பொதுமக்களை சிறிது கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு 2000 ரூபாய் நோட்டுக் கூட அச்சிடப்படவில்லை
ஒரு 2000 ரூபாய் நோட்டுக் கூட அச்சிடப்படவில்லை

2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்திவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது பொதுமக்களை சிறிது கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

மீண்டும் ஒரு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நாம் சந்திக்க நேருமோ என்று அஞ்ச வைத்துள்ளது. ஆனால் அப்படியெல்லாம் நடக்காது என்றுதான் தற்போதைக்கு சொல்லத் தோன்றுகிறது.

"தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) எழுப்பப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி இந்த பதிலை தெரிவித்துள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு திடீரென்று அறிவித்தது. பயங்கரவாதம் உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களுக்கு நிதி கிடைப்பதை தடுப்பது, கருப்புப் பணம் பதுக்கலைத் தடுப்பது, கள்ளப் பணம் உருவாவதைத் தடுப்பது ஆகிய காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது.

மேலும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காகவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக மத்திய அரசு கூறியது.

ஆனால், அடுத்த சில தினங்களில் புதிதாக ரூ.2,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. மத்திய அரசின் இந்தச் செயலை பல்வேறு தரப்பினரும் விமர்சித்தனர். புதிதாக ரூ.2,000 நோட்டுகளை வெளியிடுவது, ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு மத்திய அரசு கூறிய காரணங்களுக்கு முரணாக உள்ளது என்று அவர்கள் கூறினர்.

இதனிடையே, ரூ.2,000 நோட்டுகள் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டதாக நிகழாண்டின் தொடக்கத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்தத் தகவல்களை மத்திய அரசு மறுத்து விட்டது.

ஆனால், அண்மைக் காலமாக, ரூ.2,000 நோட்டுகளின் புழக்கம் குறைந்து விட்டதாகவும், ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து அந்த நோட்டுகள் வருவதில்லை என்று கூறப்பட்டது. இதுகுறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ ) ரிசர்வ் வங்கியிடம் தகவல் கோரி விண்ணப்பித்திருந்தது. அதற்குப் பதிளித்த ரிசர்வ் வங்கி, ரூ.2,000 நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்திவிட்டதாகத் தெரிவித்துள்ளது. அதன் விவரம்:

உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட பிறகு, கடந்த 2016-17-ஆம் நிதியாண்டில் 354.2991 கோடி எண்ணிக்கையிலான ரூ.2,000 நோட்டுகள் அச்சிடப்பட்டன. அதைத் தொடர்ந்து, 2017-18-ஆம் நிதியாண்டில் 11.1507 கோடி நோட்டுகளும், 2018-19-ஆம் நிதியாண்டில் 4.669 கோடி நோட்டுகளும் அச்சிடப்பட்டன. ஆனால், 2019-20-ஆம் நிதியாண்டில் ஒரு நோட்டுகள் கூட அச்சிடப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையை பொருளாதார நிபுணர்கள் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து பிரபல பொருளாதார நிபுணர் நிதின் தேசாய் கூறியதாவது:

புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளை திடீரென்று செல்லாது என அறிவித்தால் பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்படும். அதற்குப் பதிலாக, படிப்படியாக புழக்கத்தை குறைப்பதால் எந்தப் பிரச்னையும் ஏற்படாது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com