நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி - எஸ்தர் டஃப்லோ தம்பதிக்கும் ராஜஸ்தான் போலீசுக்கும் என்ன சம்பந்தம்?

நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி - எஸ்தர் டஃப்லோ தம்பதிக்கும் ராஜஸ்தான் போலீசுக்கும் இருக்கும் ஒரு ஆச்சர்ய சம்பந்தம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அபிஜித் பானர்ஜி - எஸ்தர் டஃப்லோ
அபிஜித் பானர்ஜி - எஸ்தர் டஃப்லோ

ஜெய்ப்பூர்: நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி - எஸ்தர் டஃப்லோ தம்பதிக்கும் ராஜஸ்தான் போலீசுக்கும் இருக்கும் ஒரு ஆச்சர்ய சம்பந்தம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

2019ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இந்தியர் உட்பட மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதனை நோபல் பரிசு தேர்வுக் குழுவினர் திங்களன்று அறிவித்தனர்.

இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ, மைக்கேல் க்ரெமர் ஆகியோருக்கு 2019ம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இவர்களில் அபிஜித் பானர்ஜியும், எஸ்தர் டஃப்லோவும் கணவன் - மனைவியாவர். ஒரே துறையில் தம்பதிக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வேதச அளவில் வறுமையை ஒழிப்பதற்கான ஆய்வுகளுக்காக இம்மூவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழ்மையை ஒழிப்பதற்கான பொருளாதார திட்டங்களை அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட  மூவரும் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

1961ம் ஆண்டு இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிறந்தவர் அபிஜித் பானர்ஜி.  இவர் ஹார்வேர்டு பல்கலைக்கழகம், பிரெசிடென்ஸி பல்கலைக்கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்புகளை படித்தவர். இவருக்கும், பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்லோவுக்கும் 2015ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அபிஜித் பானர்ஜி அமெரிக்காவில் குடியுரிமை பெற்று ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் அபிஜித் பானர்ஜி - எஸ்தர் டஃப்லோ தம்பதிக்கும் ராஜஸ்தான் போலீசுக்கும் இருக்கும் ஒரு ஆச்சர்ய சம்பந்தம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

1989-ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ராஜஸ்தான் மாநில ஐ.பி.எஸ் அதிகாரி நினா சிங். ராஜஸ்தான் மாநிலத்தின் முதல் பெண் ஏ.டி.ஜி.பியான அவர் தனது வீர தீரச் செயல்களுக்காக ஜனாதிபதி பதக்கம் பெற்றவர். அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலையில் முதுநிலைப்பட்டம் பெற்ற பின்னர், இந்தியா திரும்பிய அவர் இங்கு ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். முதலில் ராஜஸ்தான் மாநில போலீஸ் பின்னர் சிபிஐ என பணியாற்றிய அவர் தனது நேர்மையான நடவடிக்கைகளின் காரணமாக "பெண் சிங்கம்" என்று போற்றப்பட்டவர்.

இத்தகைய  சிறப்பு வாய்ந்த நினா, நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி - எஸ்தர் டஃப்லோ தம்பதியினருடன் சேர்ந்து, இரண்டு ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரைகள் ராஜஸ்தான் மாநிலத்தை முன்வைத்து காவல்துறை சீர்திருத்தங்கள் மற்றும் சாட்சியங்கள் அடிப்படையில் காவல்துறை செயல்பாடுகளை பற்றி எழுதப்பட்டதாகும்.

ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் மாநிலம் முழுவதும் உள்ள 150 காவல்நிலையங்களை ஆய்வு செய்து இந்த ஆய்வுக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

இதன் மூலமாக ராஜஸ்தான் மாநில காவல்துறையும் பெருமையுடன் இந்த தருணத்தை கொண்டாடுகிறது எனலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com