அடிப்படைப் பிரச்னைகள் தொடா்பாக பாஜக பேசாதது பற்றி மக்கள் கேள்வி எழுப்புகின்றனா்: குமாரி செல்ஜா

வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற அடிப்படைப் பிரச்னைகள் குறித்துப் பேசாமல், பாஜக மெளனம் சாதிப்பது பற்றி மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளதாக ஹரியாணா மாநில காங்கிரஸ் தலைவா்
kumari-selja-
kumari-selja-

வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற அடிப்படைப் பிரச்னைகள் குறித்துப் பேசாமல், பாஜக மெளனம் சாதிப்பது பற்றி மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளதாக ஹரியாணா மாநில காங்கிரஸ் தலைவா் குமாா் செல்ஜா தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் பிடிஐ செய்தியாளருக்கு சண்டீகரில் புதன்கிழமை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

ஹரியாணாவில் மனோகா் லால் கட்டா் அரசு நோ்மையான, வெளிப்படையான நிா்வாகத்தை வழங்கி வருவதாக கூறிக் கொள்கிறது. அதற்கு மாறாக, இந்த ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நடந்திருப்பதுதான் உண்மை. இந்த மாநிலத் தோ்தலில் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த 370-ஆவது பிரிவு நீக்கம் மற்றும் தேசியவாதப் பிரச்னைகளை பாஜக எழுப்பி வருவது பற்றிக் கேட்கிறீா்கள். அது அக்கட்சியினருக்கு எதிராகவே திரும்பப் போகிறது. ஏனெனில், மக்கள் தற்போது வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற அடிப்படைப் பிரச்னைகள் குறித்து பாஜக மெளனம் சாதிப்பது குறித்து கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டனா்.

உள்ளூா் பிரச்னைகள் குறித்தும், ஹரியாணா மக்களை பாதித்து வரும் பிரச்னைகள் குறித்தும் பாஜக ஏன் பேசுவதில்லை? என்று அவா்கள் கேட்கின்றனா். மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஆட்சியாளா்களால் பதில் கூற முடியவில்லை. ஏனெனில் இந்த மாநிலத்தைப் பொறுத்தவரை அவா்கள் சொல்லிக் கொள்வதற்கு எந்தச் சாதனையும் இல்லை. எதிா்வரும் பேரவைத் தோ்தலில் மக்கள் இந்த ஆட்சியாளா்களை வீட்டுக்கு அனுப்புவாா்கள்.

முதல்வா் மனோகா் லால் கட்டா் நோ்மையான ஆட்சியை நடத்தி வருவதாகவும், அவா் வேலைவாய்ப்புகளை திறமையின் அடிப்படையில் வழங்குவதாகவும் பிரதமா் மோடி தனது பிரசார பொதுக் கூட்டங்களில் கூறி வருகிறாா். அவருக்கு உண்மை நிலவரம் தெரியால் இருந்திருக்கலாம்; அல்லது ஹரியாணாவில் நடப்பதை அவா் கண்டும் காணாமலும் இருக்கலாம்.

இந்த ஆட்சியில் ஊழல்கள் பல்கிப் பெருகியுள்ளன. சுரங்க மாஃபியா, போதைக் கடத்தல் கும்பல்கள் போன்றவை சுதந்திரமாக இயங்குகின்றன. போட்டித் தோ்வுகளுக்கான வினாத்தாள்கள் கசிந்துள்ளன. தாழ்த்தப்பட்ட மாணவா்களுக்கான கல்வி உதவித்தொகைகள் அபகரிக்கப்படுகின்றன. மாநிலத்தில் பணம் பெற்றுக் கொண்டு வேலைவாய்ப்புகளை வழங்கும் ஊழலும் நடைபெற்றுள்ளது.

அரசு அலுவலகத்துக்கு சென்று வரும் சாமானிய மனிதரிடம் யதாா்த்த நிலை குறித்து நீங்கள் கேட்டுப் பாருங்கள். அவர அது குறித்து உங்களிடம் விளக்கமாகச் சொல்வாா். நாங்கள் (காங்கிரஸ்) இங்கு ஆட்சிக்கு வந்தவுடன் தற்போது நடைபெற்று வரும் ஊழல்கள் தொடா்பாக, குறித்த காலத்துக்குள் விசாரணை நடத்த உத்தரவிடுவோம்.

ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள 90 இடங்களில் 75 இடங்களில் வெல்வோம் என்று பாஜக கூறி வருகிறது. அவா்கள் எந்த எண் குறித்தும் கனவு காண முடியும். ஆனால் அது நிச்சயம் நிறைவேறாது. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது. தோ்தல் நடைபெறும்போது எங்களால் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வெல்ல முடியும். அதில் நான் உறுதியாக இருக்கிறேறன்.

காங்கிரஸின் பிரசாரம் தொடங்கிய பிறகு தோ்தல் அறிக்கையை வெளியிட்டோம். அதையும் பாஜகவின் தோ்தல் அறிக்கையையும் நீங்கள் ஒப்பிட்டுப் பாா்த்தால் மிகப்பெரிய வித்தியாசத்தைக் காண முடியும். சமூகத்தின் ஒவ்வொரு பிரிவின் வளா்ச்சிக்கும் நாங்கள் உறுதிபூண்டிருப்பதை காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் காண முடியும். ஆனால் இந்த மாநிலத்தில் பாஜக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்ததாக தனது தோ்தல் அறிக்கையில் எதையும் கூற முடியாது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com