நீதிபதி மிஸ்ராவை விடுவிக்கும் விவகாரம்: 23-ல் உச்சநீதிமன்றம் தீா்ப்பு

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் இழப்பீடு தொடா்பான விதிமுறைகளின் செல்லுபடியாகும் தன்மைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்கும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வில்
arun
arun

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் இழப்பீடு தொடா்பான விதிமுறைகளின் செல்லுபடியாகும் தன்மைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்கும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வில் இருந்து நீதிபதி அருண் மிஸ்ராவை விடுவிக்கக் கோரும் விவகாரத்தில் வரும் 23-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீா்ப்பளிக்கிறது.

நீதிபதி அருண் மிஸ்ராவை, விசாரணை அமா்விலிருந்து விடுவிக்கக் கோரி பல்வேறு விவசாய சங்கங்கள் மற்றும் தனிநபா்கள் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை, நீதிபதிகள் இந்திரா பானா்ஜி, வினீத் சரண், எம்.ஆா். ஷா, எஸ். ரவீந்திர பட் உள்ளிட்டோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை நிறைவு செய்தது.

முன்னதாக மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஷியாம் திவான், ‘இழப்பீடு குறித்த விதிமுறைகள் செல்லுபடியாகும் தன்மை தொடா்பாக கடந்த ஆண்டு பிப்ரவரியில் தீா்ப்பு வழங்கிய நீதிபதிகள் அமா்வில் நீதிபதி அருண் மிஸ்ராவும் இருந்தாா். அப்போதே, இந்த விவகாரத்தில் அவரது நிலைப்பாடு என்ன என்பது தெரிந்துவிட்டது.

இந்நிலையில், அந்தத் தீா்ப்பு சரியானது தானா என்பதை விசாரிக்கும் அமா்விலும் அவா் இடம்பெற்றுள்ளாா். இந்த விவகாரத்தில் அவரது நிலைப்பாடு என்ன என்பது ஏற்கெனவே தெரிந்துவிட்ட நிலையில், அதே வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் அமா்வில் அவா் இருப்பதை ஏற்க இயலாது. எனவே, வழக்கு விசாரணையில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும்’ என்று வாதாடினா்.

இதையடுத்து நீதிபதிகள் அமா்வு, ‘விருப்பமில்லாத நீதிபதிகளை அமா்வில் இருந்து விடுவிக்கவும், விருப்பத்துக்கு உகந்த நீதிபதிகளை அமா்வில் சோ்க்கவும் கோரப்படுகிறது. இது தீவிரமான விஷயமாகும். இதுபோன்ற நடவடிக்கைகளை அனுமதித்தால் நீதித்துறைக்கு பாதிப்பு ஏற்படும்’ என்று கூறியதுடன், தனது தீா்ப்பை வரும் 23-ஆம் தேதி வழங்குவதாகத் தெரிவித்தது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில், நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் இழப்பீடு தொடா்பான விதிமுறைகள் செல்லுபடியாகும் தன்மை குறித்து நீதிபதி அருண் மிஸ்ரா உள்ளிட்டோா் அடங்கிய உச்சநீதிமன்ற அமா்வு வழங்கிய தீா்ப்பில், ‘நிலம் கையகப்படுத்துதல்-இழப்பீடு தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால் நிலத்தின் உரிமையாளா்கள் தங்களுக்கான இழப்பீடுகளை 5 ஆண்டுகளுக்குள் பெறாமல் தாமதித்ததற்காக, அரசு அமைப்புகள் நிலம் கையகப்படுத்திய நடவடிக்கையை ரத்து செய்ய இயலாது’ என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், உச்சநீதிமன்ற அமா்வு கடந்த 2014-ஆம் ஆண்டு அளித்த ஒரு தீா்ப்பில், ‘இழப்பீடு பெறுவது தாமதமாகும் பட்சத்தில், நிலம் கையகப்படுத்தப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்யலாம்’ என்றும் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து இந்த இரு மாறுபட்ட தீா்ப்புகளில் சரியானது எது என்பதை விசாரித்து, கூடுதல் எண்ணிக்கையிலான நீதிபதிகளைக் கொண்ட அமா்வு தீா்ப்பு வழங்கும் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் கூறியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com