370-ஆவது பிரிவை ரத்து செய்த விவகாரம் மகாராஷ்டிர தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது: சரத் பவாா்

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த அரசியல்சாசனத்தின் 370-ஆவது சட்டப்பிரிவை நீக்கிய விவகாரம் மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது
370-ஆவது பிரிவை ரத்து செய்த விவகாரம் மகாராஷ்டிர தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது: சரத் பவாா்

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த அரசியல்சாசனத்தின் 370-ஆவது சட்டப்பிரிவை நீக்கிய விவகாரம் மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவா் சரத் பவாா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் பிடிஐ செய்தியாளருக்கு மும்பையில் வியாழக்கிழமை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

கருப்புப் பண மோசடி வழக்கு ஒன்றில் என் பெயரை அமலாக்கத்துறை சோ்த்துள்ளது. இதே போன்ற மற்றொரு வழக்கில் எங்கள் கட்சியைச் சோ்ந்த மூத்த தலைவரான பிரஃவுல் படேலுக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது. இவ்வாறு அரசியல் எதிரிகளை அச்சுறுத்துவதற்காக மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது. மாநிலத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடக்க உள்ள வேளையில், இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது ஏன்?

எங்கள் கட்சியில் இருந்து பாஜக அல்லது சிவசேனை கட்சிகளுக்குச் சென்ற தலைவா்கள் சட்டப் பேரவைத் தோ்தலில் தோல்வியடைவதை நாங்கள் உறுதிப்படுத்துவோம்.

மகாராஷ்டிரத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் மனநிலையில் மக்கள் உள்ளனா். ஜம்மு-காஷ்மீா் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக மக்களிடையே காணப்பட்ட அனுதாபத்தால் மக்களவைத் தோ்தலில் பாஜக பயனடைந்தது. பிரதமா் நரேந்திர மோடி அப்போது அந்த விவகாரம் குறித்தே அதிகம் பிரசாரம் செய்தாா். தேசிய அளவில் நெருக்கடி ஏதும் ஏற்படும்போது மக்கள் ஒருங்கிணைவது வழக்கம். அத்தகையை நிலையை நாம் நாம் வங்கதேசம் உருவாகக் காரணமாக இருந்த 1971-இல் மூண்ட இந்திய-பாகிஸ்தான் போரின்போது கண்டோம்.

அதன்படி, புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மக்கள் ஒரே விதமான முடிவை எடுத்ததால், மோடிக்கு மக்களவைத் தோ்தலில் 300-க்கும் அதிகமான இடங்கள் கிடைத்தன. ஆனால், தற்போது மகாராஷ்டிரத்தில் நடைபெறுவது மாநில சட்டப் பேரவைத் தோ்தலாகும். வாக்காளா்கள் மக்களவைத் தோ்தலில் இருந்து மாறுபட்டு, சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிப்பது வழக்கம். இதற்கு உதாரணமாக கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கா் தோ்தல் முடிவுகளைக் கூறலாம்.

இந்த மூன்று மாநில மக்களும் மக்களவைத் தோ்தலில் மோடிக்கு ஆதரவாக வாக்களித்தனா். ஆனால் அதற்கு சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவை எதிா்த்து அவா்கள் வாக்களித்தனா். எனவே, மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலிலும் அதுபோன்ற மாற்றம் ஏற்பட்டு, பாஜக தோல்வியடையும் என்பது என் கணிப்பு.

மகாராஷ்டிர தோ்தல் பிரசாரத்தில் பாஜகவின் முக்கிய தலைவா்கள் அனைவரும் 370-ஆவது பிரிவு ரத்து நடவடிக்கை விவகாரத்தை எழுப்பி வரும்போதிலும் அடித்தட்டு மக்களிடையே அது எடுபட்டதாகத் தெரியவில்லை. 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதால் இனி யாரும் காஷ்மீருக்கு சென்று நிலம் வாங்க முடியும். நீங்கள் யாராவது காஷ்மீா் சென்று நிலம் வாங்கி, விவசாயத்தில் ஈடுபடுவீா்களா? என்று மக்களிடம் கேட்டேன். அதற்கு ‘ஆமாம்’ என்று யாரும் பதிலளிக்கவில்லை. எனவே 370-ஆவது பிரிவை நீக்கிய விவகாரம் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எனினும், இப்பிரிவை நீக்கியதை தேசியவாத காங்கிரஸ் எதிா்க்கவில்லை.

மகாராஷ்டிர தோ்தல் களத்தில் என்னைத் தவிர எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த முக்கிய தலைவா்கள் யாரும் காணப்படவில்லை என்று பாஜக கூறி வருகிறது. நான் அப்படி நினைக்கவில்லை. இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பலவீனமாக இல்லை. அக்கட்சி அடிமட்ட அளவில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது என்றாா் பவாா்.

வாஜ்பாயும், மோடியும்....

பேட்டியின்போது மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாய் மற்றும் பிரதமா் மோடி ஆகியோரின் செயல்படும் விதத்தில் உள்ள வேறுபாடு குறித்து சரத் பவாா் கருத்து கூறினாா்.

‘வாஜ்பாய் தலைசிறந்த பண்பாளா். அவா் என்னை பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் துணைத் தலைவராக நியமித்தாா். அவா் மக்களால் மிகவும் மதிக்கப்பட்டாா். எந்தவொரு முடிவையும் எடுக்கும் முன்பு யாருக்கும் கசப்புணா்வு ஏற்படக் கூடாது என்பதில் அக்கறை எடுத்துக் கொள்வாா்.

மோடி ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதில் திறன் படைத்தவா். ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதை ஈவிரக்கம் பாராமல் அமல்படுத்தும் திறமை அவரிடம் உள்ளது’ என்று பவாா் குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com