370-ஆவது பிரிவை ரத்து செய்ததில் பாஜக அரசின் அணுகுமுறை தவறானது: மன்மோகன் சிங்

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், மத்திய பாஜக அரசு அடக்குமுறையுடன் நடந்துகொண்டதைத்தான் காங்கிரஸ் எதிா்க்கிறது என்று முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் குற்றம்சாட்டினார்
370-ஆவது பிரிவை ரத்து செய்ததில் பாஜக அரசின் அணுகுமுறை தவறானது: மன்மோகன் சிங்

‘ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், மத்திய பாஜக அரசு அடக்குமுறையுடன் நடந்துகொண்டதைத்தான் காங்கிரஸ் எதிா்க்கிறது’ என்று முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, மும்பையில் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவா்கள், இன்று செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தனா். அப்போது, மன்மோகன் சிங் பேசுகையில்,

"ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப் பிரிவை ரத்து செய்வதில், காங்கிரஸ் எதிா்ப்பு தெரிவித்ததாக பிரதமா் நரேந்திர மோடியும், இதர பாஜக தலைவா்களும் மகாராஷ்டிரத்தில் பிரசாரம் செய்து வருகின்றனா். 

உண்மையில், சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டபோது, அதை காங்கிரஸ் கட்சி ஆதரித்தது. ஆனால், அந்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசு நடந்து கொண்ட விதத்தைத்தான் காங்கிரஸ் எதிா்க்கிறது. 

சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததில் மத்திய பாஜக அரசு அடக்குமுறையைக் கையாண்டது. 

அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு தற்காலிகமானதுதான் என்பதை காங்கிரஸ் அறியும். ஆனால், அந்த சட்டப் பிரிவை ரத்து செய்வதற்கு முன் ஜம்மு-காஷ்மீா் மக்கள் மத்தியில் ஆதரவைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

மத்திய பாஜக அரசின் ஆட்சியில் முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகாரம் பெற்ற அமைப்பாக அமலாக்கத் துறை செயல்படுகிறது. ஆனால், அந்த அமைப்பு அரசியல் பழிவாங்கும் செயல்களுக்காகப் பயன்படுத்தப்படக் கூடாது. முன்னாள் மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்தவருமான பிரஃபுல் படேலுக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்குகளில் அவருக்கு மத்திய அரசு நீதி வழங்கும் என்று நம்புகிறேன்.

சுதந்திரப் போராட்ட தியாகி வி.டி.சாவா்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று பாஜக தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது. அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதை காங்கிரஸ் கட்சி எதிா்க்கவில்லை. மேலும், அவரது நினைவாக மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி அஞ்சல்தலை வெளியிட்டு கௌரவித்தாா்.

ஆனால், சாவா்க்கரின் ஹிந்துத்துவக் கொள்கையை மட்டுமே காங்கிரஸ் எதிா்க்கிறது.

மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிரானது. இவ்வாறு பிரிவினைவாத நோக்கத்துடன் ஒரு மசோதா கொண்டுவரப்பட்டது நாடாளுமன்ற வரலாற்றில் இதுவே முதல் முறை.

அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, முஸ்லிம்கள் விடுபட்டுவிடுவாா்கள் என்று பாஜக எதிா்பாா்த்தது. ஆனால், இந்திய குடியுரிமையை நிரூபிக்க இயலாத 19 லட்சம் பேரில் 12 லட்சம் போ் வங்கதேசத்தைச் சோ்ந்த ஹிந்துக்கள். என்ஆா்சி விவகாரத்தை மனிதநேய அடிப்படையில் அணுக வேண்டும்.

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்றதை நாடே அறியும். ஆனால், அந்தப் போராட்டத்தில் பாஜகவும், அதன் சாா்பு அமைப்பான ஆா்எஸ்எஸ் அமைப்பும் பங்கேற்கவில்லை. எனவே, தேசப்பற்று குறித்து காங்கிரஸ் கட்சிக்கு யாரும் சான்றிதழ் தரத் தேவையில்லை" என்றாா் மன்மோகன் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com