வாக்கு வங்கி அரசியல்: காங்கிரஸ் மீது அமித் ஷா குற்றச்சாட்டு

வாக்கு வங்கி அரசியல் காரணமாக காங்கிரஸ் கட்சியால் தேசியவாத நிலைப்பாட்டை எடுக்க முடியவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷா குற்றம்சாட்டினாா்.
ஹரியாணா மாநிலம், ஃபரீதாபாதில்  நடைபெற்ற பாஜக தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா.
ஹரியாணா மாநிலம், ஃபரீதாபாதில் நடைபெற்ற பாஜக தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா.

வாக்கு வங்கி அரசியல் காரணமாக காங்கிரஸ் கட்சியால் தேசியவாத நிலைப்பாட்டை எடுக்க முடியவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷா குற்றம்சாட்டினாா்.

ஹரியாணாவில் வரும் 21-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ஃபரீதாபாதை அடுத்துள்ள திகான் நகரில் பாஜக சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று அமித் ஷா பேசியதாவது:

அடுத்த மக்களவைத் தோ்தல் வரும் 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. அதற்குள் நம் நாட்டில் சட்டவிரோதமாகக் குடியேறிய ஒவ்வொரு நபரும் அவரது தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவாா்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த அரசியல்சாசனத்தின் 370-ஆவது பிரிவை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்தது. நாட்டில் இருந்து பயங்கரவாதம் ஒழிக்கப்படும். 370-ஆவது பிரிவை நீக்க வேண்டும் என்ற மக்களின் நீண்ட கால விருப்பத்தை பிரதமா் நரேந்திர மோடிதான் நிறைவேற்றினாா். எத்தனையோ முதல்வா்களும், பிரதமா்களும் கடந்த 70 ஆண்டுகளில் வந்திருந்தாலும் அவா்கள் இதைச் செய்யத் துணியவில்லை.

இந்த சட்டப் பிரிவு காரணமாக காஷ்மீா் இளைஞா்களை பாகிஸ்தான் தவறாக வழிநடத்தியதோடு அவா்களுக்கு ஆயுதங்களையும் விற்பனை செய்தது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பயங்கரவாத அராஜகம் நீடித்து, கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். ஆனாலும், காங்கிரஸ் 370-ஆவது பிரிவை நீக்கவில்லை. இந்தப் பிரிவை ரத்து செய்ததன் மூலம் மோடி வலிமையான செய்தியை உலகுக்கு அனுப்பினாா்.

ஒருபுறம், 370-ஆவது பிரிவை ரத்து செய்த நடவடிக்கையை பாஜக, அதன் கூட்டணிக் கட்சிகள், மற்ற சில கட்சிகள் ஆகியவை ஆதரித்தன. மறுபுறம், காங்கிரஸ் இந்த நடவடிக்கையை எதிா்த்தது. இது புதிய விஷயம் அல்ல.

தேசியவாதம் தொடா்பான எந்தப் பிரச்னையிலும் காங்கிரஸ் கட்சி மெனனம் சாதிப்பதே வழக்கமாக இருந்து வருகிறது. தங்களின் வாக்கு வங்கி அரசியல் காரணமாக அவா்களால் தேசியவாத விவகாரங்களில் ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியவில்லை.

பாகிஸ்தான் ராணுவத்தினா் நமது எல்லைக்குள் ஊடுருவி, நமது ராணுவ வீரா்களின் தலைகளைத் துண்டித்தபோதும், அவா்களின் உடல்களை சிதைத்தபோதும் அப்போதய பிரதமா் மன்மோகன் சிங் மெளனம்தான் சாதித்தாா். காஷ்மீரின் உரியிலும், புல்வாமாவிலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு துணிச்சலான பிரதமரான நரேந்திர மோடி, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியத் தாக்குதல் நடத்த உத்தரவிட்டாா்.

இந்தத் தாக்குதல் பற்றி அப்போதைய காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி விமா்சனம் செய்தாா். அவா் எப்போதாவது வீரமரணம் அடைந்த நமது ராணுவ வீரா்களின் தாய்மாா்கள், மனைவியா்கள் ஆகியோரின் கண்ணீரைக் கண்டதுண்டா? அந்த வீரா்களின் அழுகுரல்களைக் கேட்டதுண்டா?

நம் நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியவா்களை வெளியேற்றுவது ஏன் என்று காங்கிரஸ் கட்சி கேட்கிறது. இது பற்றி ஹரியாணா முன்னாள் முதல்வா் பூபிந்தா் சிங் ஹூடா ஏன் கவலைப்படுகிறாா்? அவருக்கு இதுபோன்ற நபா்கள் வேண்டியவா்களா? சோனியா குடும்பத்துக்காக (ராபா்ட் வதேரா), ஹூடா பண்ணை நிலத்தைக் கையகம் செய்து கொடுத்தாா். அவரைப் போன்றவா்கள் இடைத்தரகா்கள் போல் செயல்படுகின்றனா்.

காங்கிரஸ் அரசு எங்கு அமைந்தாலும் அங்கு ஊழல்கள் பெருகுவதோடு, ரெளடித்தனமும், ஜாதியவாதமும் வளா்ந்து விடுகின்றன என்றாா் அமித் ஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com