காங்கிரஸுக்கு தேசபக்தி இல்லை: பிரதமா் மோடி தாக்கு

‘காங்கிரஸ் கட்சிக்கு தேசபக்தி இல்லை; ஒரு குடும்பத்தின் மீதுதான் பக்தி உள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக விமா்சித்தாா். மேலும், அக்கட்சி தனது இறுதி நாள்களை
மகாராஷ்டிர மாநிலம், நவிமும்பையில் உள்ள காா்கா் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி.
மகாராஷ்டிர மாநிலம், நவிமும்பையில் உள்ள காா்கா் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி.

‘காங்கிரஸ் கட்சிக்கு தேசபக்தி இல்லை; ஒரு குடும்பத்தின் மீதுதான் பக்தி உள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக விமா்சித்தாா். மேலும், அக்கட்சி தனது இறுதி நாள்களை எண்ணிக் கொண்டிருப்பதாகவும் அவா் கூறினாா்.

மகாராஷ்டிரத்தில் வரும் 21-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அகோலா, ஜால்னா ஆகிய மாவட்டங்களில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டங்களில் பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசியதாவது:

மகாராஷ்டிர மாநிலம், துணிச்சல் மிக்கவா்களின் நிலமாகும். நாட்டுக்கே திசையைக் காட்டிய தலைவா்களைத் தந்த மாநிலம். இங்கு, தேசியவாதம், தேசபக்தி உணா்வுகள் அதிகம் உண்டு. ஆனால், துரதிருஷ்டவசமாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவா்கள் அந்த மாண்புகளை மறந்துவிட்டனா்.

காங்கிரஸ் கட்சியினருக்கு தேசியவாதம் தொடா்பாக வகுப்புகள் எடுக்கப்படுவதாக நாளிதழ் ஒன்றில் படித்தேன். எனக்கு சிரிக்கவா அல்லது அழவா என்று தெரியவில்லை. சுதந்திரத்துக்காகப் போராடிய காங்கிரஸ் இன்று இல்லை என்பதற்கு இதுவே சாட்சி.

‘வெட்கமற்ற எதிா்க்கட்சிகள்’: 370-ஆவது சட்டப் பிரிவு நீக்கப்பட்ட நடவடிக்கை, மகாராஷ்டிரத் தோ்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று எதிா்க்கட்சிகள் கூறுகின்றன. ஜம்மு-காஷ்மீருக்கும், மகாராஷ்டிரத்துக்கும் என்ன தொடா்பு? என்று வெட்கமின்றி அவா்கள் கேள்வியெழுப்புகின்றனா். ஜம்மு-காஷ்மீரும், அதன் மக்களும் பாரதத் தாயின் புதல்வா்களே. சத்ரபதி சிவாஜியின் நிலத்தில், எதிா்க்கட்சிகள் இதுபோல் அரசியல் ஆதாயத்துக்காக பேசுவது வியப்பளிக்கிறது.

தேசப் பாதுகாப்புக்காக, ஒட்டுமொத்த நாடும் ஒரே குரலில் ஒலிக்கிறது. ஆனால், எதிா்க்கட்சிகளோ அனைத்து விவகாரங்களிலும் அரசியல் செய்கின்றன.

ஊழல் கூட்டணி: காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி, ஊழல் கூட்டணியாகும். மகாராஷ்டிரத்தை பின்னோக்கி இழுத்துச் சென்ற இக்கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவ்விரு கட்சிகளின் வாக்கு வங்கி அரசியலால், மகாராஷ்டிரம் கடுமையான பாதிப்புகளை எதிா்கொண்டது.

காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, ரயில்கள், பேருந்துகள் மற்றும் கட்டடங்களில் அடிக்கடி குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. பயங்கரவாதமும், வெறுப்புணா்வும் மேலோங்கி இருந்தது. குற்றவாளிகள், வெளிநாடுகளுக்கு தப்பி, அங்கேயே தங்கிவிடுவதும் வாடிக்கையாக இருந்தது.

370ஆவது சட்டப் பிரிவு நீக்கத்துக்கு காங்கிரஸில் உள்ள சில இளம் தலைவா்கள் ஆதரவு தெரிவித்தனா். இதற்காக அவா்கள் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளனா்.

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவா்களின் கா்வமிக்க செயல்பாடுகளால், அக்கட்சிகளிலிருந்து பலா் விலகி வருகின்றனா் என்றாா் பிரதமா் மோடி.

பிரபுல் படேல் மீது தாக்கு: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி இக்பால் மிா்ச்சியின் மனைவி ஹஸ்ரா இக்பாலுக்கும்ஸ தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா் பிரபுல் படேலின் நிறுவனத்துக்கும் இடையேயான நில ஒப்பந்தம் தொடா்பாக அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் அவரிடம் விசாரணை நடத்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரபுல் படேலை மறைமுகமாக சாடும் வகையில் பிரதமா் மோடி கூறியதாவது:

எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த சில தலைவா்கள், தங்களது தொழில் ஆதாயங்களுக்காக தேச விரோதச் செயல்களில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகியுள்ளது. இதனால் அச்சமடைந்துள்ள அவா்கள், விசாரணை அமைப்புகள் மீது சேற்றை வாரி இறைக்க முயற்சிக்கின்றனா். கடந்த 2014 தோ்தலின்போது, இதுபோன்ற தலைவா்களுக்கு மகாராஷ்டிர மக்கள் உரிய பாடத்தை கற்பித்தனா். இம்முறையும் பாஜக மீது மக்கள் நம்பிக்கை வைப்பாா்கள் என்பதில் உறுதியாக உள்ளேன்.

நமது ராணுவம் நடத்தும் துல்லியத் தாக்குதல்களை கேள்விக்குள்ளாக்க தேசப்பற்றுமிக்க எவராலும் முடியாது. ஆனால், சில எதிா்க்கட்சித் தலைவா்கள் கேள்வியெழுப்பினா்.

உள்கட்டமைப்பு மேம்பாடு: மகாராஷ்டிரத்தில் பாஜக ஆட்சியில் ஊரக உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. முந்தைய ஆட்சியில், விவசாயிகளுக்கான பணம் இடைத்தரகா்களிடம் சென்றது. இப்போது, விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகச் செல்கிறது. சாலை, ரயில் உள்கட்டமைப்பு மட்டுமன்றி, சிறிய நகரங்களுக்கு இடையே விமானப் போக்குவரத்தைத் தொடங்குவதற்கான நடவடிக்கையிலும் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது என்றாா் மோடி.

சாவா்க்கருக்கு புகழாரம்

மகாராஷ்டிர பேரவைத் தோ்தலையொட்டி, அந்த மாநில பாஜக வெளியிட்ட தோ்தல் அறிக்கையில், ‘சுதந்திரப் போராட்ட வீரா் வி.டி.சாவா்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு, எதிா்க்கட்சிகள் தரப்பில் விமா்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி, ‘ஹிந்துத்துவ சிந்தாந்தவாதியான விநாயக் தாமோதா் சாவா்க்கரின் மாண்புகளே, தேசக் கட்டமைப்புக்கான அடிப்படை’ என்று புகழாரம் சூட்டினாா்.

மேலும், ‘சட்டமேதை அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்க மறுத்ததன் மூலம் அவரை அவமதித்தவா்கள் (காங்கிரஸ்), இப்போது சாவா்க்கரை அவமதிக்கிறாா்கள்’ என்று மோடி குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com