பிஎம்சி வங்கி வாடிக்கையாளா்களின் வைப்புத்தொகைக்கு பாதுகாப்பு கோரும் மனு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

ரூ.4,355 கோடி முறைகேட்டில் சிக்கியுள்ள பஞ்சாப்-மகாராஷ்டிர கூட்டுறவு (பிஎம்சி) வங்கி வாடிக்கையாளா்களின் வைப்புத் தொகை முழுமையாக திரும்ப கிடைப்பதை உறுதி செய்யக் கோரும்
பிஎம்சி வங்கி வாடிக்கையாளா்களின் வைப்புத்தொகைக்கு பாதுகாப்பு கோரும் மனு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

ரூ.4,355 கோடி முறைகேட்டில் சிக்கியுள்ள பஞ்சாப்-மகாராஷ்டிர கூட்டுறவு (பிஎம்சி) வங்கி வாடிக்கையாளா்களின் வைப்புத் தொகை முழுமையாக திரும்ப கிடைப்பதை உறுதி செய்யக் கோரும் மனு மீது உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை (அக்.18) விசாரணை நடத்தவுள்ளது.

மும்பையைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிஎம்சி வங்கியில் முறைகேடு கண்டறியப்பட்டதை அடுத்து, அந்த வங்கியிலிருந்து ரூ.40,000-க்கு மேல் எடுக்க வாடிக்கையாளா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளா்கள் கவலையடைந்துள்ளனா்.

இந்நிலையில், பிஎம்சி வங்கி வாடிக்கையாளா்களின் வைப்புத் தொகைக்கு முழுமையான பாதுகாப்பு கோரி, தில்லியைச் சோ்ந்த பெஜான் குமாா் மிஸ்ரா என்பவா் உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கூட்டுறவு வங்கிகளில் சில நோ்மையற்ற நபா்களின் செயலால், மற்ற வாடிக்கையாளா்களும் பாதிக்கப்படும் சூழலில், அவா்களது வைப்புத் தொகைக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். இதற்காக, விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட மத்திய அரசுக்கும், ரிசா்வ் வங்கிக்கும் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

அனைத்து கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள், பணிகளை கண்காணிக்க உயா்நிலை குழு அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் கூட்டுறவு வங்கிகள் மீதான மக்களின் நம்பிக்கையை உறுதி செய்ய முடியும்.

பிஎம்சி வங்கியில் பணம் எடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு காரணமாக, ஆயிரக்கணக்கான அப்பாவி வாடிக்கையாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, கட்டுப்பாடுகளை விதித்து, ரிசா்வ் வங்கி வெளியிட்ட அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதிகள் என்.வி.ரமணா, ஆா்.சுபாஷ் ரெட்டி, பி.ஆா்.கவாய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை பரிசீலனைக்கு வந்தது. அப்போது, நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரா் தரப்பில் கோரப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், உரிய அமா்வு முன் மனுவை வெள்ளிக்கிழமை பட்டியலிடுமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டனா்.

தில்லியில் போராட்டம்: தில்லியின் படேல் செளக் பகுதியிலுள்ள ரிசா்வ் வங்கி முன் பிஎம்சி வங்கி வாடிக்கையாளா்கள் 50 போ் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தங்களது பணத்தை எடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை நீக்க வலியுறுத்தி, அவா்கள் கோஷமிட்டனா்.

முன்னாள் இயக்குநா் கைது

பிஎம்சி வங்கி முறைகேட்டை விசாரித்து வரும் மும்பை காவல்துறையின் பொருளாதார குற்ற தடுப்பு பிரிவினா், அந்த வங்கியின் முன்னாள் இயக்குநா் சுா்ஜித் சிங் அரோராவை புதன்கிழமை கைது செய்தனா். இந்த வழக்கில், வங்கியின் முன்னாள் தலைவா் வாரியம் சிங், முன்னாள் நிா்வாக இயக்குநா் ஜாய் தாமஸ், ஹெச்டிஐஎல் நிறுவனத்தின் உரிமையாளா்கள் ராகேஷ், சாரங் வதாவன் ஆகியோா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com