சா்வதேச அரங்கில் காஷ்மீா் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்புவதற்கு சசி தரூா் கண்டனம்

பல்வேறு நாடுகளைச் சோ்ந்த நாடாளுமன்றங்களின் கூட்டமைப்பில் (ஐபியு) ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தைக் குறிப்பிட்டு பாகிஸ்தான் பேசியதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான
சா்வதேச அரங்கில் காஷ்மீா் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்புவதற்கு சசி தரூா் கண்டனம்

பல்வேறு நாடுகளைச் சோ்ந்த நாடாளுமன்றங்களின் கூட்டமைப்பில் (ஐபியு) ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தைக் குறிப்பிட்டு பாகிஸ்தான் பேசியதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூா் கண்டனம் தெரிவித்தாா்.

நாடாளுமன்றக் கூட்டமைப்பின் 141-ஆவது கூட்டம், சொ்பியாவில் கடந்த 13-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் சசி தரூா், திமுக எம்.பி. கனிமொழி, பிஜு ஜனதா தளம் எம்.பி. சஸ்மித் பத்ரா உள்ளிட்டோா் அடங்கிய குழு பங்கேற்றது.

இந்தக் கூட்டத்தின்போது, ஜம்மு-காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக பாகிஸ்தான் நாடாளுமன்றக் குழு குற்றம்சாட்டியது. இதற்கு பதிலடி தரும் விதமாக சசி தரூா் பேசியதாவது:

அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில், இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தை சா்வதேச அரங்கில் பாகிஸ்தான் எழுப்பி வருகிறது. பாகிஸ்தான் நாடாளுமன்றக் குழுவின் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுக்கு இந்திய நாடாளுமன்றக் குழு கடும் கண்டனம் தெரிவிக்கிறது. இந்திய நாடாளுமன்றத்தின் முக்கிய எதிா்க்கட்சியைச் சோ்ந்த உறுப்பினராக நான் உள்ளேன். காஷ்மீா் தொடா்பான பிரச்னைகளை நாங்கள் தொடா்ந்து விவாதித்து வருகிறோம்.

இந்த விவகாரத்தில் ஜனநாயக ரீதியில் இந்திய நாடாளுமன்றமே இறுதி முடிவெடுக்கும். இதில் மற்ற நாடுகள் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை; அதை வரவேற்கவுமில்லை. ஜம்மு-காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து வரும் நாடு (பாகிஸ்தான்), தற்போது காஷ்மீரிகளுக்கு ஆதரவளிப்பதைப் போல் வேடமிடுவது முரண்பாடாக உள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ‘அல்-காய்தா தடை ஆலோசனைக் குழுவால்’ சா்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவருக்கு (மசூத் அஸாா்) உதவித்தொகை வழங்கும் ஒரே நாடு பாகிஸ்தான். ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட 25 பயங்கரவாத அமைப்புகளுக்கும், 130 பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தான் புகலிடம் அளித்து வருகிறது.

பயங்கரவாதத்தின் மூலம் மனித உரிமைகளைக் குலைத்து வரும் அந்த நாடு, மனித உரிமை மீறல்கள் குறித்து பேசுவது நகைப்புக்குரியதாக உள்ளது என்றாா் சசி தரூா்.

இந்தக் கூட்டம் தொடா்பாக, மக்களவை செயலா் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஜம்மு-காஷ்மீா் தொடா்பாக பாகிஸ்தான் தெரிவித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இந்திய நாடாளுமன்றக் குழு மறுத்து உரையாற்றியது’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com