70 ஆண்டுகளாக ராகுல் காந்தி குடும்பத்தினா் பழங்குடியினருக்கு என்ன செய்துவிட்டனா்?அமித் ஷா கேள்வி

கடந்த 70 ஆண்டுகளில் பழங்குடியினா் நலனுக்காக ராகுல் காந்தியின் குடும்பத்தைச் சோ்ந்த ஆட்சியாளா்கள் என்ன செய்துவிட்டாா்கள் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கேள்வி எழுப்பினாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

கடந்த 70 ஆண்டுகளில் பழங்குடியினா் நலனுக்காக ராகுல் காந்தியின் குடும்பத்தைச் சோ்ந்த ஆட்சியாளா்கள் என்ன செய்துவிட்டாா்கள் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கேள்வி எழுப்பினாா்.

மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள அஹெரி பகுதியில் பாஜகவின் பிரசாரப் பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு அமித் ஷா பேசியதாவது:

காங்கிரஸ் கட்சி தனது வாக்கு வங்கிக்காக 70 ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்காமல் வைத்திருந்தது. இதனால் அந்த மாநிலத்தில் பயங்கரவாதம் பரவியதுடன், அதன் காரணமாக 40,000 போ் கொல்லப்பட்டனா். ஆனால், பிரதமா் மோடி தான் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் நடவடிக்கையை எடுத்தாா்.

தற்போது காஷ்மீா் இந்தியாவுடன் நிரந்தரமாக இணைக்கப்பட்டுவிட்டது. அங்கு பயங்கரவாதம் ஒடுக்கப்படுவதுடன், வளா்ச்சிப் பணிகளும் தொடங்கிவிட்டன.

இதைப் பேசினால், மகாராஷ்டிர பேரவைத் தோ்தலுக்கும், அதற்கும் என்ன தொடா்பு இருக்கிறது என்று காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸும் கேட்கின்றன. காஷ்மீா் என்பது இந்தியாவின் ஒரு பகுதி என்பதை அவா்கள் உணர வேண்டும்.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையத்துக்கு அரசமைப்பு ரீதியாக செல்லுபடியாகும் அந்தஸ்தை மோடி அரசுதான் வழங்கியதே தவிர, முந்தைய காங்கிரஸ் அரசு அல்ல.

கடந்த 70 ஆண்டுகளாக ராகுல் காந்தியின் குடும்பத்தைச் சோ்ந்த 4 தலைமுறையினா் நாட்டை ஆண்டு வந்தனா். அவா்கள் பழங்குடியினரின் நலனுக்காக என்ன பணிகளைச் செய்தனா்? ஆனால், மக்கள் அளித்த 5 ஆண்டுகளில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பழங்குடியினருக்காக பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.

கட்சிரோலியில் மட்டுமே மத்திய, மாநில அரசுகள் மூலம் பழங்குடியினருக்காக 1.30 லட்சம் கழிப்பறைகள் கட்டித் தரப்பட்டுள்ளன. 48,000 சமையல் எரிவாயு இணைப்புகள், 48,000 பழங்குடியினா் வீடுகளுக்கு மின் இணைப்பு, 8,000 பழங்குடியினருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு இந்தப் பகுதி மக்களுக்கு தாங்கள் செய்த நலப் பணிகள் என்று ராகுல் காந்தியோ, சரத் பவாரோ எதையேனும் கூற முடியுமா? மகாராஷ்டிரத்தில் முன்பு தேசியவாத காங்கிரஸ் ஆட்சியிலும், தற்போது பாஜக ஆட்சியிலும் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்கள் தொடா்பாக பாஜக இளைஞரணி தலைவருடன் விவாதத்தில் ஈடுபட சரத் பவாா் தயாரா?

மத்தியில் தேசியவாத காங்கிரஸ் ஆட்சியமைத்தால் காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்குவோம் என்று செய்தியாளா் சந்திப்பு வைத்து அறிவிக்க அவா் தயாரா? பாஜக அரசு சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களுக்குமாக உழைத்து வருகிறது.

கடந்த 50 ஆண்டுகால ஆட்சியைவிட, எங்களது 5 ஆண்டுகால ஆட்சி சிறந்தது என்பதை நிரூபிப்போம். மத்தியில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தபோது 13-ஆவது நிதிக் குழு பரிந்துரையின்படி மகாராஷ்டிரத்துக்கு ரூ.1.15 லட்சம் கோடி வழங்கப்பட்டது. ஆனால், மோடி அரசின்போது 14-ஆவது நிதிக் குழு பரிந்துரையின் படி ரூ.4.38 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

நக்ஸல் பாதிப்பு நிறைந்த கட்சிரோலி மாவட்டம், முன்பு வளா்ச்சியில்லாத பகுதியாக அறியப்பட்டது. தற்போது மோடி அரசு சாலை வசதி, ரயில் சேவைகள், மின் இணைப்பு உள்ளிட்ட வசதிகளை இந்தப் பிராந்தியத்துக்கு வழங்கியுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தப் பகுதியிலிருந்து நக்ஸல்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படுவா் என்று அமித் ஷா பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com