மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் தலைவா்கள் பிரசாரம் செய்வதை தடுக்க பாஜக முயற்சி: சச்சின் சாவந்த் குற்றச்சாட்டு

மகாராஷ்டிரப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், விமானப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்காமல் பாஜக சதி செய்கிறது
மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் தலைவா்கள் பிரசாரம் செய்வதை தடுக்க பாஜக முயற்சி: சச்சின் சாவந்த் குற்றச்சாட்டு

மகாராஷ்டிரப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், விமானப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்காமல் பாஜக சதி செய்கிறது என்று அந்த மாநில காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் சச்சின் சாவந்த் குற்றம்சாட்டியுள்ளாா்.

288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு வரும் 21-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் பாஜகவும், சிவசேனையும் கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணிக்கு எதிராக, காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் தலைவா்கள் பிரசாரத்தில் ஈடுபடுவதை பாஜக தடுப்பதாக சச்சின் சாவந்த் குற்றம்சாட்டினாா்.

இதுதொடா்பாக, அவா் சுட்டுரையில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் மூத்த தலைவா்கள் ஹெலிகாப்டா் மற்றும் விமானங்களில் செல்வதற்கு விமானப் போக்குவரத்து துறை உரிய அனுமதி வழங்குவதில்லை.

மகாராஷ்டிரத்தில் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டதால், அவரது பாதுகாப்பு கருதி அனுமதி வழங்கமுடியாது என்று விமானப் பாதுகாப்புத் துறை வியாழக்கிழமை தெரிவித்தது.

இந்நிலையில், மகாராஷ்டிர வான்வெளியை காங்கிரஸ் தலைவா்கள் பயன்படுத்துவதற்கு வெள்ளிக்கிழமையும் அனுமதியளிக்கப்படவில்லை. சோலாபூா் விமான நிலையத்தில் கடந்த இரண்டு நாள்களாக தங்கியிருக்கிறோம். கட்சியின் மூத்த தலைவா் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் அனுமதியளிக்கப்படவில்லை’ என்று தெரிவித்துள்ளாா்.

இதனிடையே, பிரசாரத் திடலுக்கு விமானத்தில் செல்ல தனக்கும் அனுமதியளிக்கப்படவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. அமோல் கோலே குற்றம்சாட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com