இந்தக் காலத்தில் இப்படி ஒரு அண்ணன்- தங்கையா? நெகிழ வைக்கும் இவர்களின் பாசப்பிணைப்பு!

எங்கு சென்றாலும் தங்கையை தூக்கிக்கொண்டு தான் செல்வாராம். உடல் குறைபாடு இருந்தாலும் மனதளவில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறுகிறார் மீனு.
இந்தக் காலத்தில் இப்படி ஒரு அண்ணன்- தங்கையா? நெகிழ வைக்கும் இவர்களின் பாசப்பிணைப்பு!

திருவனந்தபுரம் விலாப்பில்சாலா என்ற கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் மீனு. பிறப்பிலேயே இடுப்பிற்கு கீழ் உணர்ச்சிகளற்ற நிலையில் பிறந்தார். இதனால் அவரால் எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது. ஆனால், இந்தக் குறைகள் இருந்தாலும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் மீனு.

இதற்குக் காரணம் அவரது அண்ணன் ஹரிப்ரசாத்(எ)மனு. சுமார், 20  வருடங்களுக்கும் மேலாக எங்கு சென்றாலும் தனது தங்கையை தூக்கிக்கொண்டு செல்வார். இதனால் மனு-மீனு இருவருமே அப்பகுதியில் பிரபலமானவர்கள். இப்படி ஒரு அண்ணன்- தங்கை இருக்க முடியுமா? என்று அப்பகுதி மக்கள் வியந்து பார்க்கின்றனர்.

மனுவின் தந்தை 8 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டார். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இவர்களை அவர்களது தாயார் வீட்டு வேலை செய்து வளர்த்துள்ளார். மேலும், சிறு வயது முதலே மீனுவின் பிறவிக்குறைபாட்டை சரி செய்ய வேண்டும் என்று பல மருத்துவர்களிடம் சிகிச்சைப் பெற்றும் எந்தப் பலனும் இல்லையாம். 

அதே நேரத்தில் மீனு பிறந்தது முதலே அவள் மீது மனுவுக்கு பாசம் அதிகமாம். எங்கு சென்றாலும் தங்கையை தூக்கிக்கொண்டு தான் செல்வாராம். உடல் குறைபாடு இருந்தாலும் மனதளவில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறுகிறார் மீனு. தங்கை இப்படி இருப்பதால் மனு தனக்கு திருமணம் வேண்டாம் என்று மறுத்து வந்துள்ளார். அவர்களது உறவினர்கள் எவ்வளவோ வலியுறுத்தியும் மனு திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இது அப்பகுதியில் உள்ள அனைவருக்குமே தெரிந்த விஷயம். 

இதையடுத்து, திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர் ரம்யா என்பவர் மனுவைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், அதையும் மனு மறுத்துவிட்டார். பின்னர், மீனு, அண்ணன் மனுவை எப்படியோ சம்மதிக்க வைத்து விட்டார். திருமணத்திற்குப் பின்னரும் எனது தங்கையை நான் தூக்கிக்கொண்டு தான் செல்வேன். அவளுக்கு நான் ஒரு அப்பாவாக இருக்கிறேன். இறுதிவரை அவளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு எனக்கு இருக்கிறது' என்று மனு கூற, அதற்கு ரம்யாவும் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சமீபத்தில் மனு- ரம்யாஇருவரின் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த நிச்சயதார்த்த விழாவில் தங்கை மீனுவை தூக்கிக்கொண்டு மனு செல்வதை ஒருவர் மொபைலில் படம்பிடித்து அவர்கள் குறித்த தகவல்களுடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த அண்ணன்- தங்கை பாசத்தை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com