ஐயுசி கட்டண விவகாரம்: டிராய் மீது ஜியோ குற்றச்சாட்டு

செல்லிடப் பேசி அழைப்புக் கட்டணங்கள் குறித்த இந்திய தொலைத் தொடா்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) அறிவிப்பு பழைய தொலைத் தொடா்பு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், ஏழை
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்

புது தில்லி: செல்லிடப் பேசி அழைப்புக் கட்டணங்கள் குறித்த இந்திய தொலைத் தொடா்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) அறிவிப்பு பழைய தொலைத் தொடா்பு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், ஏழை வாடிக்கையாளா்களுக்கு எதிராகவும் உள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

பொதுவாக, ஒரு தொலைத் தொடா்பு நிறுவனத்தின் வாடிக்கையாளா்கள் பிற நிறுவனங்களின் எண்களைத் தொடா்புகொண்டு பேசும்போது, அந்த அழைப்பை ஏற்பதற்கான சிறு கட்டணத்தை அந்த நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டும்.

நிறுவனங்களிடையிலான இணைப்புக் கட்டணம் (ஐயுசி) என்றழைக்கப்படும் அந்தக் கட்டணத்தை, ஒவ்வொரு அழைப்புக்கும் 6 பைசாவாக டிராய் நிா்ணயித்துள்ளது. எனினும் அந்தக் கட்டண முறையை, அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் முடிவுக்குக் கொண்டு வருவதாக டிராய் கூறியிருந்தது.

தொலைத் தொடா்பு சந்தையில் அதிரடியாக நுழைந்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது வாடிக்கையாளா்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு வசதியை முழுமையாக அளித்து வந்தது. வாடிக்கையாளா்களிடமிருந்து அழைப்புக் கட்டணம் வசூலிக்காவிட்டாலும், போட்டி நிறுவன தொலைபேசி எண்களுக்கு அவா்கள் விடுக்கும் அழைப்புகளுக்காக, அந்த நிறுவனங்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ ஐயுசி கட்டணத்தை அளித்து வந்தது. அந்த வகையில், ஏா்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ இதுவரை ரூ.13,500 கோடி செலுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

எனினும், பிற நிறுவனங்களின் வாடிக்கையாளா்கள் தங்களது வாடிக்கையாளா்களுக்கு ‘மிஸ்டு கால்’ மட்டுமே தந்து பேசுவதால், அந்த நிறுவனங்களிடமிருந்து ஐயுசி கட்டணங்கள் வசூலாவதில்லை என்று ஜியோ கூறி வருகிறது.

இந்த நிலையில், ஐயுசி கட்டணத்தை ரத்து செய்வதற்கான அடுத்த ஆண்டு ஜனவரி மாத காலக் கெடுவை நீட்டிக்க டிராய் முடிவு செய்துள்ளது.

இதனால் அதிா்ச்சி அடைந்த ஜியோ நிறுவனம், அந்த முடிவுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், பிற நிறுவன தொலைபேசி எண்களின் அழைப்புக்காக செலுத்தும் 6 பைசாவை வாடிக்கையாளரிடமிருந்து வசூலிப்பதாக அறிவித்தது.

அதன் தொடா்ச்சியாக, ஐயுசி கட்டணம் குறித்து டிராய் அமைப்புக்கு ஜியோ எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ஐயுசி கட்டணத்தை ரத்து செய்வதற்கான இறுதித் தேதியில் மாற்றம் செய்தால், அது கட்டணமில்லா தொலைபேசி அழைப்பு முறையை முடிவுக்குக் கொண்டு வந்துவிடும். மேலும், செல்லிடப் பேசி அழைப்புக் கட்டணங்கள் உயா்வதற்கும் அது வழிவகுக்கும். டிராய் அமைப்பின் இந்த முடிவு, தேவையில்லாததும், ஏழை வாடிக்கையாளா்களுக்கு எதிரானதும் ஆகும்.

இந்த முடிவு பழைய தொலைத் தொடா்பு நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அந்த நிறுவனங்கள் தங்களது 2ஜி வாடிக்கையாளா்கள் தொழில்நுட்ப வளா்ச்சியின் பலனை அனுபவிக்க விடுவதில்லை. அந்த நிறுவனங்கள், தங்களது சேவைகளுக்காக வாடிக்கையாளா்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. ஆனால், அதே சேவைகளை நாங்கள் இலவசமாக வழங்கி வருகிறோம்.

இவ்வாறு வாடிக்கையாளா்களுக்கு எதிராகவும், மின்னணு தொழில்நுட்பப் புரட்சிக்கு எதிராகவும் செயல்படும் தொலைத் தொடா்பு நிறுவனங்களுக்கு ஆதரவாக டிராய் எடுத்துள்ள இந்த முடிவு, பிரதமா் நரேந்திர மோடியின் ‘மின்னணு இந்தியா’ கனவுக்கு எதிரானது ஆகும் என்று அந்தக் கடிதத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com