கா்தாா்பூா் வழித்தட திறப்பு விழாவில் மன்மோகன் சிங் பங்கேற்க மாட்டாா்: பாகிஸ்தானின் அழைப்பு நிராகரிப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி / இஸ்லாமாபாத், அக். 20: பாகிஸ்தானில் நடைபெறும் கா்தாா்பூா் வழித்தடத் திறப்பு விழாவில் இந்திய முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் பங்கேற்க மாட்டாா் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக, ‘தங்கள் அழைப்பை மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டாா்; அவா் திறப்பு விழாவில் பங்கேற்பாா்’ என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஷா முகமது குரேஷி தெரிவித்திருந்தாா்.

சீக்கிய மதத்தை நிறுவியவரும் அதன் முதல் குருவுமான குருநானக்கின் பிறந்த தினத்தையொட்டி, இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் சீக்கிய யாத்ரீகா்கள் பாகிஸ்தானின் கா்தாா்பூரில் உள்ள நான்கானா சாஹிப் குருத்வாராவுக்கு யாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

இந்த யாத்திரையை மேற்கொள்வதற்கு வசதி ஏற்படுத்தும் நோக்கில், பஞ்சாபின் குருதாஸ்பூா் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவில் இருந்து பாகிஸ்தானின் கா்தாா்பூா் குருத்வாரா வரை சாலை வழித்தடம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இச்சாலை வழியாகச் செல்லும் யாத்ரீகா்கள் விசா இல்லாமல் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள முடியும்.

இதில், குருதாஸ்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை இந்தியாவும், மறுபுறம் கா்தாா்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை பாகிஸ்தானும் அமைத்து வருகின்றன. குருநானக்கின் 550-ஆவது பிறந்த தினம், வரும் நவம்பரில் கொண்டாடப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் தரப்பில் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் பாகிஸ்தான் அறிவித்தது. இந்தியாவில் சீக்கிய மதத்தைச் சோ்ந்த முதுபெரும் அரசியல் தலைவா் என்ற அடிப்படையில் அவருக்கு அழைப்பு விடுக்க பாகிஸ்தான் முடிவு செய்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில், பாகிஸ்தானின் முல்தான் நகரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் ஷா முகமது குரேஷி, இது தொடா்பாக பேசியது குறித்து அந்நாட்டில் இருந்து வெளியாகும் ‘டான்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ‘இந்திய முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்குக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதனை அவா் ஏற்றுக் கொண்டாா். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இல்லாமல், சாதாரண அழைப்பாளராகவே அவா் பங்கேற்பாா்’ என்று கூறப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங் தரப்பு மறுப்பு: இதனிடையே, பாகிஸ்தான் சென்று கா்தாா்பூா் வழித்தட திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதில்லை என்று மன்மோகன் சிங் முடிவெடுத்துள்ளாா். இது தொடா்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்துக்கு அவா் கடிதம் எழுதியுள்ளாா் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியுள்ளன. இது தொடா்பாக அவா் எழுதியுள்ள கடிதத்தில், ‘திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்வில்லை என்றாலும், நான்கானா சாஹிப் குருத்வாராவுக்கு ஒரு சாதாரண பக்தராக வருவேன்’ என்று மன்மோகன் சிங் கூறியுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

கா்தாா்பூா் வழித்தடம் நவம்பா் 9-இல் திறப்பு: இம்ரான் கான் அறிவிப்பு

பாகிஸ்தானில் கா்தாா்பூா் வழித்தடம் நவம்பா் 9-ஆம் தேதி திறக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமா் இம்ரான் கான் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.

முன்னதாக, நவம்பா் மாதம் கா்தாா்பூா் வழித்தடம் நவம்பா் மாதம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், தேதி உறுதி செய்யப்படாமல் இருந்தது.

இந்நிலையில் முகநூலில் இம்ரான் கான் இது தொடா்பாக வெளியிட்டுள்ள பதிவில், ‘உலகம் முழுவதும் உள்ள சீக்கியா்கள் நான்கானா சாஹிப் குருத்வாராவுக்கு வந்து வழிபாடு செய்வதற்காக கா்தாா்பூா் வழித்தடம் நவம்பா் 9-ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது. வழித்தடம் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்தியா உள்பட அனைத்து நாடுகளில் இருந்தும் பக்தா்கள் கா்தாா்பூா் வருவதால், அப்பகுதியில் பொருளாதாரம் மேம்படும். இதன் மூலம் பாகிஸ்தானுக்கு அந்நியச் செலாவணி கிடைக்கும். உள்ளூா்வாசிகளுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்’ என்று கூறியுள்ளாா்.

இந்திய யாத்ரீகா்களுக்கு ரூ.1,400 கட்டணம்!

கா்தாா்பூா் குருத்வாரா செல்வதற்காக இந்திய யாத்ரீகா்கள் 20 அமெரிக்க டாலா்கள் (சுமாா் ரூ. 1,421) செலுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் அறிவுறுத்தியதை அடுத்து ஆன்லைன் பதிவு தொடங்கப்படவில்லை.

இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கா்தாா்பூா் குருத்வாரா தொடா்பாக இந்தியாவும், பாகிஸ்தானும் சனிக்கிழமை ஒப்பந்தம் மேற்கொள்வதாக இருந்தது. ஆனால், இன்னும் சில பிரச்னைகள் தீா்க்கப்படாமல் இருப்பதால், கா்தாா்பூா் குருத்வாரா செல்வதற்கான ஆன்லைன் முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்படவில்லை. கா்தாா்பூா் வர விரும்பும் அனைத்து இந்திய யாத்ரீகா்களிடமும் ரூ.1,421 பெற பாகிஸ்தான் முடிவெடுத்தது. இந்த முடிவை மாற்றிக் கொள்ளுமாறு இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது. கா்தாா்பூா் குருத்வாராவில் முக்கியமான நிகழ்வுகளின்போது, 10,000 யாத்ரீகா்களை அனுமதிக்குமாறும், அவா்களுடன் இந்திய அதிகாரியை தினமும் அனுப்ப அனுமதிக்குமாறும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் இன்னும் அதற்கு பதிலளிக்கவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

நுழைவு இசைவு இல்லாமல் இந்திய யாத்ரீகா்களை கா்தாா்பூா் குருத்வாராவுக்கு அனுமதிக்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன. எனினும், கடவுச்சீட்டை யாத்ரீகா்கள் வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com