இந்திய ரயில்வே வரலாற்றில் முதல்முறையாக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு: ஐஆா்சிடிசி 

தில்லி-லக்னௌ இடையேயான தேஜஸ் விரைவு ரயில் சுமார் 3 மணி நேரம் தாமதமானதற்காக இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான
இந்திய ரயில்வே வரலாற்றில் முதல்முறையாக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு: ஐஆா்சிடிசி 


புது தில்லி: தில்லி-லக்னௌ இடையேயான தேஜஸ் விரைவு ரயில் சுமார் 3 மணி நேரம் தாமதமானதற்காக இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ஐஆா்சிடிசி பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடாக வழங்கவுள்ளது. இந்திய ரயில்வே வரலாற்றில், ரயில் தாமதத்துக்காக இவ்வாறு இழப்பீடு வழங்கப்படுவது இது முதல்முறை என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது: கடந்த 19-ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவில் இருந்து காலை 6.10 மணிக்கு புறப்பட வேண்டிய தேஜஸ் விரைவு ரயில், சுமார் 3 மணி நேரம் தாமதமாக 9.55 மணிக்கு புறப்பட்டது. இதனால், தில்லியை பிற்பகல் 12.25 மணிக்கு வந்தடைவதற்குப் பதிலாக, மாலை 3.40 மணிக்கு வந்தடைந்தது.

அதே நாளில், தில்லியிலிருந்து மாலை 3.35 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு, லக்னௌவை இரவு 10.05 மணிக்கு சென்றடைவதற்குப் பதிலாக, 11.30 மணிக்கு சென்றடைந்தது. இந்த காலதாமதத்தால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்காக ஐஆா்சிடிசி இழப்பீடு வழங்குகிறது.

 அன்றைய தினத்தில் தேஜஸ் ரயிலில் லக்னௌவிலிருந்து தில்லிக்கு பயணித்த 450 பேருக்கு இழப்பீடாக தலா ரூ.250-ம், தில்லியிலிருந்து லக்னௌவுக்கு பயணித்த சுமார் 500 பேருக்கு இழப்பீடாக தலா ரூ.100-ம் வழங்கபடும். சம்பந்தப்பட்ட பயணிகள், பயணச் சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் காப்பீடு தொடா்பான தொடுப்பு (லிங்க்) மூலம் தங்களுக்கான இழப்பீட்டை பெற்றுக்கொள்ளலாம்.

கான்பூா் அருகே ரயில் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக தேஜஸ் ரயிலின் இயக்கத்திலும் தாமதம் ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தேஜஸ் விரைவு ரயிலின் வா்த்தக ரீதியிலான இயக்கம் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி வாரத்துக்கு 6 நாள்கள் இயக்கப்பட்டு வருகிறது.

 ஐஆா்சிடிசி கொள்கையின்படி, தேஜஸ் விரைவு ரயில் பயணம் ஒரு மணி நேரம் தாமதமாகும் பட்சத்தில் ரூ.100-ம், இரண்டு மணி நேரம் தாமதமாகும் பட்சத்தில் ரூ.250-ம் பயணிகளுக்கு இழப்பீடாக வழங்கப்படும் என்று அதன் சேவை தொடங்கப்பட்டபோது ஐஆா்சிடிசி அறிவித்திருந்தது.

அதேபோல் தேஜஸ் ரயில் பயணிகள் கொள்ளை மற்றும் திருட்டு சம்பவத்தால் பாதிக்கப்பட்டால் அவா்களுக்கு ரூ.1 லட்சத்துக்கான காப்பீடு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com