ஆரே காலனி பகுதியில் மெட்ரோ பணிமனை அமைப்பதை நிறுத்த வேண்டியதில்லை: உச்சநீதிமன்றம்

மும்பை ஆரே காலனி பகுதியில் மெட்ரோ ரயில் பணிமனை கட்டுமானப் பணிகளை நிறுத்த வேண்டியதில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்


மும்பை ஆரே காலனி பகுதியில் மெட்ரோ ரயில் பணிமனை கட்டுமானப் பணிகளை நிறுத்த வேண்டியதில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மும்பையின் ஆரே காலனி பகுதியில் ஆயிரக்கணக்கான மரங்கள் உள்ளன. அங்கு மெட்ரோ ரயில் பணிமனையை அமைப்பதற்காக 2,400 மரங்களை வெட்ட பிருஹண் மும்பை மாநகராட்சி திட்டமிட்டது. இதற்கான பணிகளைத் தடுக்க உத்தரவிடுமாறு கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அண்மையில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவை உயர்நீதிமன்றம்  கடந்த 4-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. 
மரம் வெட்டும் பணிகள் தொடங்கிய நிலையில், கல்லூரி மாணவர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் ஆரே காலனி பகுதியில் போராட்டம் நடத்தினர். அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே, மரம் வெட்டுவதற்குத் தடை விதிக்குமாறு கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தாக்கல் செய்த இரண்டாவது மனுவையும் மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிடுமாறு கோரி மும்பையைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் ரிஷவ் ரஞ்சன், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி  ரஞ்சன் கோகோய்க்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தை பொது நல மனுவாகக் கருதி, அதை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாவது:
மும்பையின் நுரையீரல் போல் கருதப்படும் ஆரே காலனி வனப்பகுதியை அழிக்க மும்பை மாநகராட்சி தொடர்ந்து வருவதால் இந்தக் கடிதத்தை எழுதுகிறோம். செய்தித்தாள்களில் வந்த தகவல்களின்படி இதுவரை 1,500 மரங்கள் வெட்டப்பட்டு விட்டன. இது மட்டுமின்றி, மரம் வெட்டுவதை எதிர்த்து அமைதி வழியில் போராட்டம் நடத்திய எங்கள் நண்பர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அமைதியான வழியில் போராட்டம் நடத்தியதற்காக மும்பை போலீஸாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள 29 ஆர்வலர்களின் ஜாமீன் மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் மாணவர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனர். மாணவர்களை போலீஸார் தாக்கியதோடு, அவமதிக்கும் வகையிலும் நடத்தியுள்ளனர் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. 
இந்த விவகாரம் தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மரங்களை வெட்டுவதற்கு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, தீபக் குப்தா ஆகியோர் தடை விதித்தனர்.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை மீண்டும் நடைபெற்றது. அப்போது, ஆரே காலனியில் இருந்த மரங்கள், வெட்டப்பட்ட மரங்கள் ஆகியவை தொடர்பாக படங்களுடன் ஓர் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், மரங்களைத்தான் வெட்டக் கூடாதே தவிர ஆரே காலனியில் மெட்ரோ ரயில் பணிமனையைக் கட்டும் பணிகளை தாங்கள் நிறுத்தவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது, பிருஹண் மும்பை மாநகராட்சி சார்பில் ஆஜராகி இருந்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில் ஆரே காலனியில் மேலும் மரங்கள் வெட்டப்படவில்லை என்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு முழுவதுமாகப் பின்பற்றப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை வரும் நவம்பர் மாதத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com