
மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தன்கருக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க மாநில அரசுக்கு விருப்பமில்லை; எனவேதான், அவருக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பு வழங்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது என்று பாஜக தெரிவித்துள்ளது.
முன்னதாக, மேற்கு வங்க ஆளுநருக்கான பாதுகாப்பு பொறுப்பை ஏற்குமாறு, மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு (சிஆர்பிஎஃப்) மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் உத்தரவிட்டது. மேலும், நாட்டின் எந்தப் பகுதிக்கு அவர் சென்றாலும், சிஆர்பிஎஃப் படையினர்தான் பாதுகாப்பு அளிப்பார்கள் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மேற்கு வங்க அரசு எழுதிய கடிதத்தில், மேற்கு வங்க ஆளுநருக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பை சிஆர்பிஎஃப் படையிடம் ஒப்படைக்கும் முன் மாநில அரசுடன் கலந்தாலோசிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ், கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
ஜாதவ்பூர் பல்கலைக்கழக வளாகத்துக்குள் கடந்த மாதம் ஆளுநர் ஜகதீப் தன்கரும், மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவும் எத்தகைய சூழலை எதிர்கொண்டனர் என்பதை நாம் பார்த்தோம். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு எவ்வாறு சீர்கெட்டுள்ளது என்பதற்கு அந்தச் சம்பவமே
சாட்சியாகும்.
ஆளுநருக்கு சிஆர்பிஎஃப் பாதுகாப்பு வழங்குவதை, முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்க்கிறார். அவர், ரயில்வே அமைச்சராக பதவி வகித்த காலத்தில், அவருக்கு ரயில்வே பாதுகாப்புப் படையினர்தான் பாதுகாப்பு அளித்தனர். பின்னர், மேற்கு வங்க முதல்வராக மம்தா பொறுப்பேற்ற பிறகும், அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் குழுவில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் சிலர் இடம்பெற்றனர். இப்போது, மேற்கு வங்க ஆளுநருக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்குவதை அவர் எதிர்ப்பது வியப்பாக உள்ளது என்றார் திலீப் கோஷ்.