
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் உயரதிகாரிகள் நெறியற்ற செயல்களில் ஈடுட்டதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து இந்திய பங்கு, பரிவர்த்தனை வாரியம் (செபி) விசாரணையைத் தொடங்கியுள்ளது.
மேலும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வர்த்தகப் பரிமாற்ற விவரங்களை சேகரிக்குமாறு பங்குச் சந்தை அமைப்புகளுக்கு செபி உத்தரவிட்டுள்ளது.
இதுதவிர, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரிகள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு சம்மன் அனுப்பவுள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சலீல் பரேக், தலைமை நிதி நிர்வாக அதிகாரி நிலஞ்சன் ராய் ஆகிய இருவரும் நிறுவனத்தின் லாபத்தை உயர்த்திக் காட்டுவதற்காக நெறியற்ற நடைமுறைகளைப் பின்பற்றியதாக, அந்த நிறுவனத்தில் பணியாளர்கள் ஒரு தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இடித்துரைப்பாளர்கள் என கருதப்படும் அவர்கள், இது தொடர்பாக, இன்போசிஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவுக்கு கடந்த செப்டம்பர் 20-தேதி ஒரு மின்னஞ்சல் அனுப்பினர். அதில், அவர்கள் தங்களது பெயர்களைக் குறிப்பிடவில்லை.
இதேபோல், தேதி குறிப்பிடாமல் மற்றொரு கடிதத்தையும் அவர்கள் அனுப்பி வைத்தனர். அந்த இரு கடிதங்களும் நிறுவனத்தின் தணிக்கைக் குழு முன் கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி வைக்கப்பட்டது. இதேபோல், இவ்விரு கடிதங்களும், இயக்குநர்கள் அல்லாத குழுவின் பரிசீலனைக்கும் முன்வைக்கப்பட்டது.
இந்தத் தகவல்களை இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் நந்தன் நிலகேணி, செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். மேலும், இந்தப் புகார்கள் குறித்து விசாரிப்பதற்கு ஷர்துல் அமர்சந்த் மங்கல்தாஸ் என்ற சட்ட உதவி நிறுவனம் பணியில் அமர்த்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், இந்த முறைகேடு செபி அமைப்பு விசாரணயைத் தொடங்கியுள்ளது. மேலும், அந்த நிறுவனத்தின் பங்கு வர்த்தகம் பற்றிய தரவுகளை சேகரிக்க வேண்டும் என்றும் மும்பை மற்றும் தேசியப் பங்குச் சந்தைகளுக்கு செபி உத்தரவிட்டுள்ளது.
இதுதவிர, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு வர்த்தகத்தில் யாருக்கேனும் தொடர்பு உள்ளதாக என்பதையும் விசாரிக்கவுள்ளது.
இதனிடையே, இடித்துரைப்பாளர்கள் அளித்த புகார்கள் குறித்து தங்களிடம் இதுவரை தெரிவிக்காதது ஏன் என்று இன்ஃபோசிஸ் நிறுவனத்திடம் மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) கேள்வி எழுப்பியுள்ளது.