
உத்தரகண்டில் அதிருப்தி எம்எல்ஏக்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில், அந்த மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹரீஷ் ராவத்துக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்துள்ளது.
உத்தரகண்டில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது, அரசுக்கு எதிராக அக்கட்சி எம்எல்ஏக்கள் 9 பேர் போர்க்கொடி உயர்த்தினர். அவர்களின் ஆதரவைப் பெறுவதற்காக ஹரீஷ் ராவத் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ரகசிய விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அவரது அரசு கலைக்கப்பட்டு, மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னர், உச்சநீதிமன்ற உத்தரவின்படி மாநில சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ஹரீஷ் ராவத் மீண்டும் முதல்வரானார்.
குடியரசுத் தலைவர் ஆட்சியின்போது, ஹரீஷ் ராவத் மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தார். சிபிஐ விசாரணையை திரும்பப் பெறுவதற்கான முன்மொழிவு மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், அந்த முன்மொழிவை மத்திய அரசு ஏற்காததால், சிபிஐ விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, மத்திய அரசின் முடிவை எதிர்த்து உத்தரகண்ட் உயர்நீதிமன்றத்தில் ஹரீஷ் ராவத் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய சிபிஐக்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து, ஹரீஷ் ராவத், அவருடைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஹரக் சிங் ராவத் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்தது.
முன்னதாக, அந்த ரகசிய விடியோ குஜராத் மாநிலம் காந்திநகரிலுள்ள தடயவியல் சோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன் உண்மைத்தன்மை குறித்து ஆராயப்பட்டது. விடியோவில் இடம்பெற்றுள்ள காட்சிகள் எதுவும் போலியாக சித்தரிக்கப்படவில்லை என்று அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.