
தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழ்நிலை உள்ள நாடுகள் பட்டியலை வெளியிடுவதற்கு, இந்தியாவில் கணக்கீடு மேற்கொள்ள கொல்கத்தா, பெங்களூரு நகரங்களை உலக வங்கி இணைத்துள்ளது.
உலக வங்கி சார்பில் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழ்நிலை உள்ள நாடுகள் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அந்நிய நாடுகளில் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்கள், உரிய முடிகளை எடுக்க இந்தப் பட்டியல் உதவிபுரிந்து வருகிறது.
இதில், 190 நாடுகளிலுள்ள குறிப்பிட்ட நகரங்களில் காணப்படும் உள்கட்டமைப்பு வசதிகள், வரி விதிப்பு முறை, தொழில் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள், கட்டுமானத்துக்கான உரிமங்கள் வழங்குதல், மின்சாரம் வழங்குதல், கடன் முறையாக வழங்குதல், எல்லை கடந்த வர்த்தகம், திவால் நிறுவனங்களைக் கையாளும் சட்டங்கள், ஒப்பந்தங்களை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களின் அடிப்படையில் நாடுகள் பட்டியலிடப்படுகின்றன.
நடப்பு ஆண்டுக்கான பட்டியலில் இந்தியா 77-ஆவது இடத்தைப் பிடித்தது. இந்தக் கணக்கீட்டுக்காக இந்தியா சார்பில் தில்லி, மும்பை நகரங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக மத்திய அரசின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஒட்டுமொத்த இந்தியாவில் தொழில் தொடங்குவதற்குக் காணப்படும் உகந்த சூழ்நிலைகளை இரண்டு நகரங்களை மட்டும் அடிப்படையாக வைத்து அறிந்துகொள்ள முடியாது. இதன் காரணமாக, கணக்கீடு மேற்கொள்ளப்படும் நகரங்களில் கொல்கத்தாவையும், பெங்களூருவையும் இணைக்கும் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டன.
இனி உலக வங்கி மேற்கொள்ளும் கணக்கெடுப்பில், இந்தியா சார்பில் 4 நகரங்கள் பங்கேற்கும். இது பட்டியலில் இந்தியாவின் தரவரிசை அதிகரிக்க உதவும். நடப்பு ஆண்டில் 77-ஆவது இடத்தில் உள்ள இந்தியா, வரும் ஆண்டுகளில் முன்னேற்றமடைய இந்த நடவடிக்கை உதவும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
2020-ஆம் ஆண்டுக்கானதொழில் தொடங்குவதற்கு உகந்த சூழ்நிலை உள்ள நாடுகள் பட்டியலை விரைவில் உலக வங்கி வெளியிட உள்ளது.