
கோப்புப் படம்
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் (74) தரப்பில் ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரம், மத்திய புலனாய்வுத் துறையினரால் (சிபிஐ) ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதனிடையே, இதே முறைகேட்டில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில், அவரைக் கைது செய்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த தில்லி சிறப்பு நீதிமன்றம், அவரிடம் விசாரணை நடத்தவும், தேவைப்பட்டால் கைது செய்யவும் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, அக்டோபர் 16-இல் அமலாக்கத் துறையின் அதிகாரிகள் தில்லி திகார் சிறையில் சிதம்பரத்திடம் நேரில் விசாரணை நடத்தினர். அதன்பிறகு, சட்டவிரோதப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, அக்டோபர் 17-இல் சிதம்பரத்தை தில்லி ரௌஸ் அவென்யூ நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் முன் அமலாக்கத் துறையின் விசாரணை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது, அவரை 14 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதியிடம் அனுமதி கோரப்பட்டது. இதற்கு சிதம்பரம் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு அக்டோபர் 24 வரை ஏழு நாள்கள் சிதம்பரத்தை காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், சிபிஐ தொடுத்த வழக்கில் சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அவருக்கு செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. எனினும், அமலாக்கத் துறையின் விசாரணையில் அவர் உள்ளதால், வியாழக்கிழமை (அக். 24) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
ஜாமீன் மனு: இந்நிலையில், அமலாக்கத் துறை வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை சிததம்பரம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
சிபிஐ தொடுத்த வழக்கில் ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம், நான் வெளிநாடு தப்பிச் செல்வதற்கோ அல்லது விசாரணையில் இருந்து தலைமறைவாவதற்கோ வாய்ப்பில்லை எனக் கூறியுள்ளது. ஏர்செல் - மேக்ஸில் வழக்கிலும் எனக்கு முன்ஜாமீன் வழங்கிய போது, விசாரணை நீதிமன்றத்திற்கு தெரிவிக்காமல் நாட்டை விட்டு நான் வெளியேற முடியாது எனக் கூறப்பட்டுள்ளது. சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை தொடுத்த வழக்கில் ஒரே நிதிப் பரிவர்த்தனை குற்றச்சாட்டுதான் உள்ளது. எனவே, இரண்டுக்கும் தனித் தனியாக ரிமாண்ட் இருக்க முடியாது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கிலும், சட்டவிரோதப் பரிவர்த்தனை வழக்கிலும் குற்றம்சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சாட்சியங்களைத் தூண்டவோ, ஆவணங்களைத் திருத்தவோ அல்லது நீதிமன்ற நடவடிக்கையை தடுக்கும் செயல்களிலோ நான் ஈடுபடவில்லை. இந்த வழக்கில் அனைத்து ஆதாரங்களும் ஆவணமாக்கப்பட்டுள்ளன. அந்த ஆவணங்கள் அமலாக்கத் துறையின் பாதுகாவலில் உள்ளன. இதனால், அவற்றை நான் எவ்வித மாற்றமும் செய்ய முடியாது. அமலாக்கத் துறையின் விசாரணைக்கு நான் எப்போதும் தயாராகவே உள்ளேன். இதற்கு முன்பு நான்கு வெவ்வேறு தேதிகளில் அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது. அப்போது அதன் முன் ஆஜராகி கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளேன்.
கடைசியாக பிப்ரவரி 8-இல் நடைபெற்ற விசாரணையிலும் ஆஜராகியுள்ளேன். அக்டோபர் 16-இல் திகார் சிறையில் என்னிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர்.
அதன்பிறகு, தெளிவற்ற காரணத்திற்காக கைது செய்தனர். எனக்கு 74 வயது ஆவதாலும், பல்வேறு உடல் உபாதைகள் இருப்பதாலும் எனது உடல் நிலை மிகவும் பலவீனமாக உள்ளது என்று ஜாமீன் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.