
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் ஒடிஸாவின் பல இடங்களில் புதன்கிழமை தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வங்கக் கடலின் மேற்கு-மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த தாழ்வுநிலை வியாழக்கிழமை இரவு மேலும் வலுப்பெறவுள்ளது. இதன் விளைவால், ஒடிஸாவின் பெரும்பாலான பகுதிகளில் சனிக்கிழமை வரை மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
கஞ்சாம், கஜபதி, புரி, ஜகத்சிங்பூர், மல்காங்கிரி, கோராபுட் மற்றும் ராயகடா மாவட்டங்களில் புதன்கிழமை காலை முதல் கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டனர். சாலைகளில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.