
டி.கே. சிவகுமாருக்கு ஜாமீன் கிடைத்ததை வரவேற்று, கர்நாடக மாநிலம், சிக்கமகளூரில் புதன்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடிய காங்கிரஸ் தொண்டர்கள்.
கருப்புப் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே. சிவகுமாருக்கு தில்லி உயர்நீதிமன்றம் புதன்கிழமை சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது.
கர்நாடக மாநிலத்தில் 7 முறை எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிவகுமார் (57), ஹவாலா முறையில் கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் செய்ததாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும், வருமான வரித் துறை கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்து, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதனடிப்படையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறையினர், அவரிடம் 3 முறை விசாரணை நடத்தினர். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக தில்லியில் உள்ள கர்நாடக அரசு இல்ல ஊழியர் உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், தில்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிவகுமார் கடந்த மாதம் 3-ஆம் தேதி நான்காவது முறையாக விசாரணைக்கு ஆஜரானார். அப்போது, அவர் கைது செய்யப்பட்டார். சிவகுமாரிடம் ரூ.200 கோடி கருப்புப் பணம் உள்ளதாகவும், ரூ.800 கோடி மதிப்பிலான பினாமி சொத்துகள் உள்ளதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்தது.
இந்த வழக்கில் சிவகுமாருக்கு ஜாமீன் வழங்க தில்லி சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டதையடுத்து, அவரது சார்பில் தில்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ் கைத் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சிவகுமார் தரப்பு வழக்குரைஞர் வாதாடுகையில், இந்த வழக்கு விசாரணை முடியும் வரை சிவகுமார் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல மாட்டார். உடல்நலக் குறைவு காரணமாகவே ஜாமீன் கோரப்படுகிறது என்றார்.
அதன் பின்னர் நீதிபதி கூறுகையில், சிவகுமார் தற்போது எந்தப் பதவியிலும் இல்லை. அவருக்கு நெருக்கமானவர்களும் எவ்வித பதவியிலும் இல்லை. அதனால் அவரால் எளிதில் ஆதாரங்களை அழிக்க இயலாது என்றார். மேலும், ஜாமீனில் வெளியே வந்து வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழிக்க முற்படக்கூடாது; 25 லட்சம் ரூபாய் மதிப்பில் பிணையப் பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்பு: டி.கே.சிவகுமாருக்கு ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
முன்னாள் பிரதமர் தேவெ கெளடா தனது சுட்டுரைப் பக்கத்
தில், டி.கே.சிவகுமாருக்கு தில்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளதன் மூலம் நமது நாட்டின் நீதியியல் கட்டமைப்பின்மீது சாதாரண மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கூறுகையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒருவரை சிறைக்கு அனுப்புவதில் தவறில்லை. குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு முன்பே ஒருவரை சிறையில் அடைப்பது எப்படி சரியாகும். பழிவாங்கும் அரசியல் சரியானதல்ல என்றார்.
முன்னாள் முதல்வர் குமாரசாமி தனது சுட்டுரையில், தில்லி உயர்நீதிமன்றம், டி.கே.சிவகுமாருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த 21-ஆம் தேதி டி.கே.சிவகுமாரை சிறையில் சந்தித்து, அவரது தைரியத்தை அதிகமாக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். அப்போது, ஜாமீன் கிடைக்கும். நம்பிக்கையோடு இருங்கள் என்று கூறியிருந்தேன். டி.கே.சிவகுமார் மிகவும் தைரியசாலி. எனவே, பழிவாங்கும் அரசியலை அவர் எதிர்கொள்வார் என்றார்.
சிறையில் சோனியா காந்தி சந்திப்பு
திகார் சிறையில் சிவகுமாரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புதன்கிழமை காலை சந்தித்து பேசினார். சோனியா காந்தியுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அம்பிகா சோனி, அக்கட்சி எம்.பி.யும், சிவகுமாரின் சகோதரருமான டி.கே. சுரேஷ் ஆகியோரும் சென்றிருந்தனர்.
இதுதொடர்பாக டி.கே. சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் சிவகுமாரை சோனியா காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக சிவகுமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மாதிரி காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்களை மத்திய அரசு பழிவாங்கி வருவதாகவும் சிவகுமாரிடம் சோனியா காந்தி தெரிவித்தார். சிவகுமாருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார். இந்த வழக்கில் போராடி வெற்றி பெறுவோம் என்று டி.கே. சுரேஷ் கூறினார்.