
வட கர்நாடகத்தில் பலத்த மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் சிக்கி உதவி கோருபவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக பெங்களூரு விதான செளதாவில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்களுடனான கூட்டத்தில் அவர் பேசியது:
வட கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணை நிற்க வேண்டியது அரசின் கடமை. எனவே, தீபாவளி பண்டிக்கைக்காக விடுமுறை எடுத்துக்கொள்ளாமல் போர்க்கால அடிப்படையில் 24 மணி நேரமும் பணியாற்றி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை கொண்டு சேர்க்க வேண்டும்.
நிதி ஆதாரங்கள் ஏதாவது குறைவாக இருந்தால், தேவைப்படும் நிதி குறித்து முன்மொழிவுகளை உடனடியாக அனுப்பிவைக்கவும். அதனடிப்படையில் உடனடியாக நிதி விடுவிக்கிறேன். ஆனால், வெள்ள நிவாரண உதவிகளை வழங்குவதில் எவ்வித தொய்வும் ஏற்படக் கூடாது. வெள்ள நிவாரண உதவிகளை வழங்கும் பணியில் அலட்சியமாக நடந்துகொள்ளும் அதிகாரிகள் மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த ஆகஸ்ட் மாதம் வெள்ளம் ஏற்பட்டபோது எவ்வகையில் துரித கதியில் செயல்பட்டு வெள்ள நிவாரணப் பணிகளைச் செயல்படுத்தினீர்களோ, அதே வேகத்தில் தற்போதும் செயல்பட வேண்டும். வெள்ள நிவாரணப் பணிகளை கால தாமதமாகவோ, மெத்தனமாகவோ செயல்படுத்தக் கூடாது. இதில் ஏதாவது குளறுபடிகள் ஏற்பட்டால், அதை அரசு சகித்துக் கொள்ளாது.
வெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடியாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். மறுவாழ்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும். தொந்தரவில் சிக்கியுள்ள மக்களை மீட்டு பத்திரமான இடத்தில் தங்க வைக்க வேண்டும் என்றார்.
முன்னதாக, கடந்த 3 மாதங்களாக நடைபெற்றுவரும் வெள்ள நிவாரண உதவிகள் குறித்த தகவல்களை முதல்வர் எடியூரப்பா கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் அரசு தலைமைச் செயலாளர் விஜய்பாஸ்கர், வளர்ச்சி ஆணையர் வந்திதா சர்மா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.