
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய டாங்குகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தால் ஏவப்பட்ட இரு ஏவுகணைகளை, இந்திய ராணுவம் புதன்கிழமை செயலிழக்க வைத்தது.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய பகுதியில் இந்திய ராணுவத்தின் நிலைகள் அருகே கிடந்த அந்த ஏவுகணைகளை ராணுவப் பொறியாளர்கள் செயலிழக்க வைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, பூஞ்ச் மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் செவ்வாய்க்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தியிருந்தனர்.
பாலாகோட், மெந்தார் ஆகிய பகுதிகளில் மோட்டார் ரக குண்டுகள் மூலம் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் பொதுமக்கள் 2 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவமும் உரிய பதிலடி கொடுத்தது.
கடந்த ஒரு மாதமாக எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தீவிரமாக அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.