
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து அரசு அமைப்புகளும் ஜனநாயக முறைப்படியே செயல்படுகின்றன என்று அமெரிக்கா தெரிவித்தது.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்து மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடவடிக்கை மேற்கொண்டதால் அங்கு கடும் கட்டுப்பாடுகளும், தடைகளும் விதிக்கப்பட்டன. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் தெற்காசியாவில் மனித உரிமை விவகாரங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதத்தின்போது, இந்திய அரசு மேற்கண்ட நடவடிக்கையால் காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், அங்கு மக்கள் நடமாட்டத்துக்கும், தொலைத்தொடர்பு சேவைகளுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் அமெரிக்க எம்.பி.க்கள் குற்றம்சாட்டினர்.
அப்போது, அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பொறுப்பு அதிகாரி ஆலிஸ் ஜி.வெல்ஸ் அத்துறையின் துணைக்குழுவைச் சேர்ந்த எம்.பி.க்கள் முன் கூறியதாவது:
அனைவருக்கும் ஒரு விஷயத்தை அடிக்கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ளார். அவரது கட்சி தனிப்பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து பிரதமர் மோடி மேற்கொண்ட நடவடிக்கைக்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் உள்பட அனைவரும் ஒப்புதல் அளித்தனர். உச்சநீதிமன்றமும் அந்த முடிவை ஆய்வு செய்து வருகிறது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்களை நீதிபதிகள் விசாரித்து வருகின்றனர். இதன்மூலம், இந்தியாவின் அனைத்து அரசு அமைப்புகளும் ஜனநாயகப்படி இயங்குவது நிரூபணமாகிறது.
காஷ்மீர் மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று அமெரிக்கா நம்புகிறது. ஆனால், காஷ்மீரில் தேர்தல் நடைபெறும்போதுதான் மக்களின் விருப்பத்தை நாம் கண்டறிய முடியும் என்று அவர் கூறினார்.
பாகிஸ்தானை சர்வதேச ஊடகங்கள் கவனிப்பதில்லை: இதனிடையே, பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஆதரவளித்து வருவதை சர்வதேச ஊடகங்கள் கடந்த 30 ஆண்டுகளாக கவனிக்கத் தவறிவிட்டன என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய பத்திரிகையாளர் ஆர்த்தி திகோ சிங் தெரிவித்தார்.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து தெரிவிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு ஆர்த்தி சிங் வரவழைக்கப்பட்டிருந்தார். அவரிடம் இந்திய அரசு குறித்து அமெரிக்க எம்.பி.க்கள் குற்றம்சாட்டினார். அதற்கு அவர் பதிலளிக்கையில், கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் உதவி வருகிறது. காஷ்மீருக்குள் பயங்கரவாதத்தை கொண்டு வருவதற்கு பாகிஸ்தான் தீவிர முயற்சி செய்து வருகிறது. பாகிஸ்தானின் பயங்கரவாதத்தால் காஷ்மீர் மக்கள் அடைந்த துயரம் குறித்து சர்வதேச ஊடகங்கள் எதுவும் எழுதவில்லை. பாகிஸ்தானின் செயல்களை கவனிக்கவில்லை. இந்த விவகாரத்தில் சர்வதேச ஊடகங்கள் ஒருதலைப்பட்சமாக உள்ளன என்றார்.