
இந்திய - சீன எல்லையில் கடந்த 5 ஆண்டுகளில் கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன; சீன எல்லையின் இறுதிப் பகுதி வரை செல்லும் வகையில் சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று இந்தோ-திபெத் எல்லை காவல் படையின் (ஐடிபிபி) தலைமை இயக்குநர் எஸ்.எஸ்.தேஸ்வால் தெரிவித்தார்.
சீனாவுடனான எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் இந்திய-திபெத் எல்லை காவல் படையின் நிறுவன தினம் வியாழக்கிழமை (அக்.24) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அந்தப் படையின் தலைமை இயக்குநர் எஸ்.எஸ்.தேஸ்வால், தில்லியில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:
3,488 கி.மீ தொலைவுகொண்ட இந்திய - சீன எல்லையில் இயல்பான சூழல் பராமரிக்கப்பட்டு வருகிறது. சீனப் படையைவிட, இந்திய-திபெத் எல்லை காவல் படையின் திறனை மேம்படுத்த தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
எல்லையில் ஐடிபிபி படையின் நிலைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் 25 நிலைகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்புகள், சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. முதல்கட்டமாக 270 கி.மீ. தொலைவில் 11 சாலைகள் அமைக்கும் பணி நிறைவடைந்துவிட்டது. அடுத்தகட்டமாக 1,033 கி.மீ. தொலைவுக்கு 45 சாலைகள் அமைக்கும் பணிகள் எதிர்வரும் மாதங்களில் நிறைவடைந்துவிடும்.
எல்லையில் கண்காணிப்பு தொழில்நுட்பங்களும், பல்வேறு தொழில்நுட்பங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
சீன எல்லையின் இறுதிப் பகுதி வரை செல்லும் வகையில் சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்திய -சீனப் படையினர் இடையே பேச்சுவார்த்தை நடைமுறைகள் சிறப்பாக கடைப்பிடிக்கப்படுகின்றன. இந்திய - சீன எல்லை பாதுகாப்பாக உள்ளது என்றார் எஸ்.எஸ்.தேஸ்வால்.
அண்மை காலங்களில் இந்திய எல்லைக்குள் சீனப் படையினர் எத்தனை முறை அத்துமீறி நுழைந்தனர் என்று அவரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதுதொடர்பான விவரத்தை தெரிவிக்க மறுத்துவிட்ட தேஸ்வால், இந்த விவகாரத்தில், இந்தியத் தரப்பு உறுதியாக செயல்படுகிறது என்று பதிலளித்தார்.
கடந்த 1962-ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய - சீன போருக்கு பின்னர், இந்திய - சீன எல்லையை பாதுகாப்பதற்காக இந்தோ - சீன எல்லை காவல் படை உருவாக்கப்பட்டது. இப்படை வீரர்கள், மலைப் பகுதிகளில் போரில் ஈடுபடும் பயிற்சி பெற்றவர்களாவர். சுமார் 90 ஆயிரம் வீரர்களைக் கொண்ட ஐடிபிபி படை, மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படுகிறது.