
ராஞ்சியில் புதன்கிழமை பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்எல்ஏ சுகதேவ் பகத்தை கைகுலுக்கி வரவேற்ற முதல்வர் ரகுவர் தாஸ் (இடது).
ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 5 எம்எல்ஏக்கள் ஆளும் பாஜகவில் புதன்கிழமை இணைந்தனர்.
ஜார்க்கண்டில் முதல்வர் ரகுவர் தாஸ் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுகதேவ் பகத், மனோஜ் யாதவ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் குணால் சாரங்கி, ஜெயப்பிரகாஷ் பாய் படேல், சுயேச்சை எம்எல்ஏவான பன்னு பிரதாப் சாகி ஆகியோர் முதல்வர் ரகுவர் தாஸ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். ராஞ்சியில் உள்ள பாஜக தலைமையகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜார்கண்ட் மாநில காவல்துறை முன்னாள் டிஜிபி டி.கே.பாண்டே, பாஜகவில் இணைந்துள்ளார். அவர் சில மாதங்களுக்கு முன்புதான் ஓய்வு பெற்றார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் சுசித்ரா சின்ஹா, ஆர்.பி. சிங் ஆகியோரும் பாஜகவில் ஐக்கியமாயினர். விருப்ப ஓய்வு பெற்ற காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஐபிஎஸ் அதிகாரி அருண் ஓரானும், பாஜகவுக்கு வந்துவிட்டார்.
81 எம்எல்ஏக்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் இப்போது 47 ஆக அதிகரித்துள்ளது. இப்போது பாஜகவில் இணைந்துள்ள காங்கிரஸ் எம்எல்ஏ சுகதேவ் பகத், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவராவார்.
கட்சியில் இணைந்தவர்களை வரவேற்றுப் பேசிய முதல்வர் ரகுவர்தாஸ், பாஜகவின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலர் இணைந்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியிலும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவிலும் வாரிசு அரசியல் உள்ளது. இதனால், அங்கு மற்றவர்களுக்கு உரிய வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. ஆனால், பாஜகவில் சாதாரண தொண்டர்களும் உயரிய பதவிகளை எட்ட முடியும். தேசிய அளவிலும் வாரிசு அரசியல் நடத்துபவர்களை மக்கள் புறந்தள்ளி வருகின்றனர். வரும் நவம்பர்-டிசம்பரில் ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் பாஜக அமோக வெற்றி பெறும் என்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் பாஜகவில் இணைந்து வருவது சான்றாக உள்ளது என்றார்.