
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின், மக்களுக்கு எதிரான பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நவம்பரில் நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் புதன்கிழமை அறிவித்தது.
இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலர் (அமைப்பு) கே.சி. வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:
மோடி தலைமையிலான மத்திய அரசின் நிர்வாகத் தோல்வியை மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில், வரும் நவம்பர் 5 முதல் 15-ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டங்களை நடத்த இருக்கிறது.
அந்தந்த மாநில தலைநகரங்களில் மாவட்ட அளவில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். தேசத் தலைநகர் தில்லியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அப்போது, கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை 8.1 சதவீதமாக அதிகரித்தது, பொருளாதாரச் சரிவு, அத்தியாவசியப் பொருள்களுக்கான விலை உயர்வு, வங்கிக் கட்டமைப்பின் சிதைவு, விவசாயிகள் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மக்களுக்கு எடுத்துக் கூறப்படும்.
இதற்கெல்லாம் மத்திய அரசின் பொறுப்பற்ற தன்மைதான் காரணம் என்பதை காங்கிரஸ் கட்சியினர் மக்களுக்கு தெரியப்படுத்துவர். நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பான முடிவு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
முன்னதாக இந்த ஆர்ப்பாட்டங்கள் அக்டோபர் 15 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக அவை நவம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
குஜராத் காங்கிரஸ் கலைப்பு: இதனிடையே, காங்கிரஸ் கட்சி தனது குஜராத் மாநில பிரிவை புதன்கிழமை கலைத்தது. எனினும், அதன் தலைவராக நீடிக்குமாறு அமித் சாவ்தா கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.
குஜராத் பிரிவைக் கலைப்பதற்கு கட்சித் தலைவர் சோனியா ஒப்புதல் தெரிவித்ததாகக் கூறியுள்ள கே.சி. வேணுகோபால், விரைவில் புதிய நிர்வாகிகளுடன் குஜராத் காங்கிரஸ் பிரிவு அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
17 பேர் குழு அமைப்பு: மகாராஷ்டிரம், ஹரியாணா மாநில சட்டப் பேரவைகளின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய மூத்த தலைவர்கள் 17 பேர் அடங்கிய குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது.