
பாகிஸ்தானில் இருந்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், பஞ்சாப் மாநிலத்தில் ஒருங்கிணைந்த பயங்கரவாத தடுப்பு மையத்தை மத்திய அரசு அமைக்கிறது.
இதுதொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் புதன்கிழமை கூறியதாவது:
சண்டீகர் அல்லது அமிருதசரஸில் அமையவுள்ள ஒருங்கிணைந்த பயங்கரவாத தடுப்பு மையத்துக்கான அதிகாரிகள், தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), ரா உளவு அமைப்பு, புலனாய்வுப் அமைப்பு (ஐபி), எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), பஞ்சாப் காவல்துறை ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இந்த அமைப்பு, இணைய வழியிலானஅச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளக் கூடியதாக அமைக்கப்படுகிறது. இந்த மையத்துக்கான ஒப்புதலை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த செவ்வாய்க்கிழமை வழங்கியது. தற்போதைய நிலையில், மேற்கூறிய அனைத்து அமைப்புகளும், மாநில காவல்துறையும் தனித்தனியே சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றன. தேவையேற்படும் பட்சத்தில் தங்களுக்கிடையே தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன.
இனி, பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக இந்த மையத்தின் மூலம் அவை ஒருங்கிணைந்து பணியாற்றவுள்ளன. இதேபோல், பிராந்திய அளவில் தேசிய பாதுகாப்புப் படைக்கான (என்எஸ்ஜி) மையத்தை அமைப்பது தொடர்பாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
கமாண்டோ படையினர் பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு உடனடியாக பதிலடி தரும் வகையில், இந்த என்எஸ்ஜி மையத்துக்கான இடம், பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில், ஜம்மு-காஷ்மீரை ஒட்டிய பகுதியில் ஒதுக்கப்படவுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.