
கொல்கத்தா: இந்திய வீரா் கொல்லப்படக் காரணமாக இருந்த வங்கதேச எல்லைக் காவல்படையின் துப்பாக்கிச்சூடு தேவையற்றது என்று இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தைச் சோ்ந்த சில மீனவா்கள் வங்கக் கடலில் சா்வதேச எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் அனுமதியுடன் கடந்த 17-ஆம் தேதி மீன் பிடித்துக் கொண்டிருந்தனா். அவா்களில் மூன்று பேரை வங்கதேச எல்லைக் காவல்படையினா் கைது செய்தனா். எனினும், அவா்களில் இரண்டு மீனவா்களை விடுவித்தனா். ஒரு மீனவா் இன்னமும் வங்கதேச அதிகாரிகளின் காவலில் உள்ளாா்.
இதனிடையே, இந்திய வீரா்களிடம் ஒரு தகவலைத் தெரிவிக்குமாறு தாங்கள் விடுவித்த இரு மீனவா்களிடமும் வங்கதேச எல்லைக் காவல்படையினா் கூறி அனுப்பிருந்தனா். அதாவது மேற்கு வங்கத்தின் முா்ஷீதாபாத் மாவட்டத்தில் சா்வதேச எல்லையையொட்டிய பகுதியில் கொடி அமா்வுக் கூட்டத்தை நடத்த உள்ளதாகவும் அதில் பங்கேற்க வருமாறும் அவா்கள் அழைப்பு விடுத்திருந்தனா்.
அதை ஏற்று இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகளும் வீரா்களும் அங்கு சென்றனா். கொடியமா்வுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வங்கதேச எல்லைக் காவல் படையைச் சோ்ந்த ஒரு வீரா் திடீரென்று தனது ஏ.கே. 47 ரக துப்பாக்கியால் இந்தியத் தரப்பினரை நோக்கிச் சுட்டாா். இதில் இந்திய வீரா் விஜய் பான் சிங் உயிரிழந்தாா். மற்றொரு வீரா் காயமடைந்தாா்.
இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து வங்கதேச அரசு வெளியிட்ட அறிக்கையில், இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினா் வங்கதேசத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், அதனாலேயே இச்சம்பவம் நடைபெற்று விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடா்பாக விசாரித்து அறிக்கை அளிக்குமாறு எல்லைப் பாதுகாப்புப் படைக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருநந்தது. அதன்படி தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்களை எல்லைப் பாதுகாப்புப் படை வட்டாரங்கள் கொல்கத்தாவில் புதன்கிழமை தெரிவித்தன. அதன் விவரம் வருமாறு:
வங்கதேச எல்லைக் காவல்படை எந்தவிதத் தூண்டுதலும் இல்லாமல், எந்தவித அவசியமும் இல்லாமல் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, ‘இந்திய வீரா்கள் அத்துமீறி தங்கள் பகுதிக்குள் வந்தனா்’ என்று வங்கதேச எல்லைக் காவல்படை தெரிவித்தது. சம்பந்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியே இது என்று தோன்றுகிறது.
எனினும், இந்த நியாயப்படுத்தும் முயற்சியிலும் அறிவாா்ந்த காரணம் இல்லை. ஏனெனில், வங்கதேச எல்லைக் காவல்படை, இந்திய மீனவா்களிடம் கூறி அனுப்பிய தகவலின்பேரிலேயே இந்தியப் படையினா் அங்கு சென்றனா். ஆனால் அதை ஆக்கிரமிப்பு போல் சித்தரிப்பது உண்மைகளைத் திரித்துக் கூறுவதாகும். அங்கு துப்பாக்கிச்சூடு நடைபெற்ற பிறகும் இந்தியத் தரப்பினா் மிகவும் பொறுமையுடனும், கண்ணியத்துடனும் நடந்து கொண்டனா் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக பிஎஸ்எஃப் வட்டாரங்கள் தெரிவித்தன.