
ஹரியாணாவில் 5 வாக்குச்சாவடிகளில் புதன்கிழமை மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.
இதுதொடர்பாக மாநில இணை தலைமை தேர்தல் அதிகாரி இந்தர்ஜித் கூறியதாவது: உசனா காலன், பெரி, நர்னால், கோஸ்லி, பிரித்லா ஆகிய பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட 5 வாக்குச்சாவடிகளில் கடந்த 21ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது சில குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, அந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, 5 வாக்குச்சாவடிகளிலும் புதன்கிழமை மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், உசனா காலன் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 71-ஆம் எண் வாக்குச்சாவடியில் அதிகபட்சமாக 90.7 சதவீத வாக்குகள் பதிவாகின. மறுவாக்குப்பதிவையொட்டி, 5 வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்றார் அவர்.
90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணாவில், கடந்த 21-ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை நடைபெறவிருப்பது
குறிப்பிடத்தக்கது.