
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கிஷ்த்வார் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் அந்த பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஜஹாங்கீர் சரூரியின் சகோதரர் ஆவார்.
காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராகவும், பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி செய்பவர்களை ஒடுக்குவதற்காகவும் பாதுகாப்புப் படையினரும், போலீஸாரும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி நடைபெற்ற தேடுதல் வேட்டையில், கிஷ்த்வார் மலைப்பகுதியில் பதுங்கியிருந்த இரு பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் அவர்களது பெயர் அப்துல் கரீன், தானிஷ் நசீர் என்பது தெரியவந்தது. இதில் அப்துல் கரீன், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தலைவர் ஜஹாங்கீர் சரூரியின் சகோதரர் ஆவார்.
இந்த இருவரும் நேரடியாக பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபடவில்லையென்றாலும், பயங்கரவாத இயக்கத்துக்கான ஆள் சேர்ப்பு, தகவல் சேர்ப்பு, ஆயுதக் கடத்தலுக்கு உதவுவது உள்ளிட்ட வேலைகளை செய்து கொடுத்துள்ளனர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாள்களாக நடைபெற்று வரும் தேடுதல் வேட்டையில் இதுவரை 12-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புக்கு உதவி செய்து வந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.