காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கிறதா சிவசேனா? சஞ்சய் ரௌத் விளக்கம்

மகாராஷ்டிராவில் பாஜகவும், சிவசேனாவும் இணைந்து ஆட்சி அமைக்கவுள்ளது என சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கிறதா சிவசேனா? சஞ்சய் ரௌத் விளக்கம்


மகாராஷ்டிராவில் பாஜகவும், சிவசேனாவும் இணைந்து ஆட்சி அமைக்கவுள்ளது என சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி தொடர்ந்து 160 தொகுதிகளுக்கும் மேல் முன்னிலை வகித்து வருகிறது. அதேசமயம், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து சுமார் 90 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன. 

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்கு 145 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

இந்நிலையில், சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் சிவசேனா இணைந்து ஆட்சி அமைக்கவுள்ளது" என்றார்.

தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர்,

"இல்லை. நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்துதான் தேர்தலை எதிர்கொண்டோம். இந்தக் கூட்டணியே தொடரும். ஏற்கெனவே முடிவு செய்தது போல், 50-50 ஃபார்முலாவில் எவ்வித மாற்றமும் கிடையாது. இந்த ஃபார்முலாவை செயல்படுத்துவது குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள்" என்றார்.

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் 2014 தேர்தலைக் காட்டிலும் இந்த தேர்தலில் பெருமளவில் முன்னேற்றம் கண்டுள்ளனர். இதுகுறித்து எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில்,

"ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சியும் வலுவாக இருக்க வேண்டும்" என்றார்.

முன்னதாக, சிவசேனாவின் ஆதரவு இல்லாமல் பாஜகவால் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியாது என்று சஞ்சய் ரௌத் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com