
Dushyant Chautala
ஹரியாணாவின் கிங் மேக்கராக கருதப்படும் ஜனநாயக் ஜனதா கட்சியின் (ஜேஜேபி) செயற்குழு கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இதில், பிற்பகல் 3.30 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைகளில் பாஜக 40 இடங்களிலும், காங்கிரஸ் 32 இடங்களிலும், பிற கட்சிகள் 18 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
ஆனால், அங்கு ஆட்சி அமைப்பதற்கு 46 இடங்கள் தேவை. இதன்மூலம், அங்கு தொங்கு சட்டப்பேரவை அமைவதற்கே வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. எனவே, அம்மாநிலத்தில் ஆட்சியைத் தீர்மானிக்கும் கிங் மேக்கராக ஜனநாயக் ஜனதா கட்சி இருக்கிறது. இந்த கட்சி 9 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதுதவிர 6 சுயேச்சை வேட்பாளர்களும் முன்னிலையில் உள்ளனர்.
இதனால், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி மூலம் ஜனநாயக் ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சிங் சௌதாலாவுக்கு முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், ஜனநாயக் ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டத்துக்கு துஷ்யந்த் சிங் சௌதாலா அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு கூடுகிறது. இதுகுறித்து துஷ்யந்த் சௌதாலா தெரிவிக்கையில்,
"புதிய அரசை அமைப்பதற்கான சாவி ஜேஜேபியுடன் இருப்பதாக நான் நம்புகிறேன்" என்றார். ஜனநாயக் ஜனதா கட்சியின் சின்னம் சாவி என்பது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.