சமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கக் கோரி புதிய மனு

சமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கக் கோரி, தில்லி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


சமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கக் கோரி, தில்லி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த மனுக்களை உச்சநீதிமன்றம் தனது விசாரணைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை மாற்றியது.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், வழக்குரைஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய், தில்லி உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
தேர்தல்களின்போது, பொய்யான செய்திகள் மற்றும் பணம் கொடுத்து வெளியிடப்படும் செய்திகளைப் பரப்புவதற்காக சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய செய்திகளைத் தடுப்பதற்கு, போலி சமூக வலைதள கணக்குகள் களையெடுக்கப்பட வேண்டும். இதற்காக, சமூக வலைதள கணக்குகளுடன் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை இணைப்பதை கட்டாயமாக்க வேண்டும். இந்த விவகாரத்தில், மத்திய அரசுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். தேர்தல்களின்போது பொய்ச் செய்திகள் பரவுவதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, தேர்தல் ஆணையத்துக்கும், பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
மேலும், நாட்டில் ஏராளமான போலி முகநூல், சுட்டுரைக் கணக்குகள் உள்ளன; அவற்றின் வாயிலாக பிரிவினைவாதம், ஜாதியவாதம், மதவாதம் ஆகியவற்றை தூண்டும் கருத்துகள் பரப்பப்படுகின்றன என்றும் அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
முன்னதாக, இதே கோரிக்கையை வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தில் அஸ்வினி குமார் உபாத்யாய் கடந்த 14-ஆம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது, அவரை மனுவை விசாரணைக்கு ஏற்காத உச்சநீதிமன்றம், தில்லி உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com