
ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கான புதிய துணை நிலை ஆளுநர்களும், ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியும் வரும் 31-ஆம் தேதி பதவியேற்க உள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த அரசியல்சாசனத்தின் 370-ஆவது பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்தது. மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இவை அக்டோபர் 31-ஆம் தேதி அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஜம்மு-ரகாஷ்மீர், லடாக் ஆகிய புதிய யூனியன் பிரதேசங்களுக்கான புதிய துணை நிலை ஆளுநர்களும், ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியும் வரும் 31-ஆம் தேதி பதவியேற்க உள்ளனர். முன்னதாக, இந்தப் பதவியேற்பு விழாக்கள் குளிர்காலத் தலைநகரான ஜம்முவில் அக்டோபர் 25-இல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இந்த விழாக்கள் ஸ்ரீநகரில் நடைபெற உள்ளதாக மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் ரோஹித் கன்சால் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதனிடையே, இரு புதிய யூனியன் பிரதேசங்களுக்கும் துணை நிலை ஆளுநராக தற்போதைய ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்கே நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அடுத்த சில தினங்களில் பிரதமர் அலுவலகம் அறிவிக்கை ஒன்றை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.