பிஎஸ்என்எல்-எம்டிஎன்எல் நிறுவனங்கள் இணைப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நஷ்டத்தில் இயங்கி வரும் பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்) மற்றும் எம்டிஎன்எல் (மகாநகர் டெலிபோன் நிகம் லிமிடெட்) ஆகிய இரு பொதுத் துறை நிறுவனங்களையும் இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை
பிஎஸ்என்எல்-எம்டிஎன்எல் நிறுவனங்கள் இணைப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்


நஷ்டத்தில் இயங்கி வரும் பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்) மற்றும் எம்டிஎன்எல் (மகாநகர் டெலிபோன் நிகம் லிமிடெட்) ஆகிய இரு பொதுத் துறை நிறுவனங்களையும் இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இவ்விரு நிறுவனங்களையும் ரூ.68,751 கோடியில் வலுப்படுத்தும் திட்டத்துக்கும், 4ஜி சேவையைத் தொடங்குவதற்கும், ஊழியர்கள் விருப்ப ஓய்வுபெறும் திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. 
இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிஎஸ்என்எல் நிறுவனமும், எம்டிஎன்எல் நிறுவனமும் இணைக்கப்படும். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் துணை நிறுவனமாக எம்டிஎன்எல் செயல்படும். இவ்விரு நிறுவனங்களும் ரூ.68,751 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளன. இந்த நிதி ஒதுக்கீடுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இவ்விரு நிறுவனங்களிலும் முதலீடு தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, தங்க பத்திர திட்டத்துக்கு ரூ.15,000 கோடி ஒதுக்கப்படும். 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ரூ.20,140 கோடியும், ஊழியர்களின் விருப்ப ஓய்வு திட்டத்துக்கு ரூ.29,937 கோடியும் செலவிடப்படும். இதுதவிர, சரக்கு-சேவை வரிகளுக்கு ரூ.3,674 கோடியும் செலவிடப்படும்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 1.68 லட்சம் பேரும், எம்டிஎன்எல் நிறுவனத்தில் 22,000 பேரும் பணியாற்றுகிறார்கள். அவர்கள் விரும்பினால் ஓய்வுபெறலாம். ஓய்வுபெறுமாறு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்றார் அவர்.
கோதுமை, பருப்பு வகைகளின் ஆதரவு விலை உயர்வு: கோதுமை, பருப்பு வகைகள் ஆகியவற்றின் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
கோதுமைக்கு குவிண்டாலுக்கு ரூ.85 உயர்த்தப்பட்டு, குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.1,925-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பருப்பு வகைகளுக்கு குவிண்டாலுக்கு ரூ.325 உயர்த்தப்பட்டு, குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.4,800-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுகுறித்து மத்திய செய்தி, ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வேளாண் விளைபொருள்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த வேண்டும் என்று வேளாண் பொருள்களுக்கான விலை நிர்ணய ஆணையம் (சிஏசிபி) ஏற்கெனவே பரிந்துரை செய்திருந்தது. அந்தப் பரிந்துரைகளை ஏற்று ராபி பருவத்தில் (2019 ஜூன் -2020 ஜூலை) விளைந்த அனைத்து வேளாண்பொருள்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையையம்  உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளின் வருவாயை உயர்த்த வேண்டும் என்பதற்காக இந்த முடிவை மத்திய அமைச்சரவை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, கோதுமையின் ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.85 உயர்த்தப்பட்டு, ரூ.1,925-ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பார்லியின் ஆதரவு விலை ரூ.85 உயர்த்தப்பட்டு, விலை ரூ.1,525-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பருப்பு சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாக, மசூர் பருப்பின் விலை குவிண்டாலுக்கு ரூ.325 உயர்த்தப்பட்டு, குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.4,800-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், சன்னா கடலையின் விலை குவிண்டாலுக்கு ரூ.255 உயர்த்தப்பட்டு, ஆதரவு விலை ரூ.4,875-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் வித்துக்கள், கடுகு ஆகியவற்றின் விலை குவிண்டாலுக்கு ரூ.225 உயர்த்தப்பட்டு, குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.4,425-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com