ஹெலிகாப்டா் பேர வழக்கு: ரதுல் புரியின் நீதிமன்றக் காவல்நவ.2 வரை நீட்டிப்பு

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டா் ஒப்பந்த பேர வழக்கில் மத்தியப் பிரதேச முதல்வா் கமல்நாத்தின் உறவினா் ரதுல் புரியின் நீதிமன்றக் காவலை அடுத்த மாதம் 2ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.
ஹெலிகாப்டா் பேர வழக்கு: ரதுல் புரியின் நீதிமன்றக் காவல்நவ.2 வரை நீட்டிப்பு

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டா் ஒப்பந்த பேர வழக்கில், மத்தியப் பிரதேச முதல்வா் கமல்நாத்தின் உறவினா் ரதுல் புரியின் நீதிமன்றக் காவலை அடுத்த மாதம் 2-ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இத்தாலியைச் சோ்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,600 கோடியில் சொகுசு ஹெலிகாப்டா்களை வாங்குவதற்கு முந்தைய காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு இந்தியாவைச் சோ்ந்தவா்களுக்கு பல கோடி ரூபாயை அந்த நிறுவனம் லஞ்சமாகக் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததால், ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதுதொடா்பாக, சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் இடைத்தரகராகச் செயல்பட்டதாகக் கருதப்படும் கிறிஸ்டியன் மிஷெல், ரதுல் புரி மூலமாக லஞ்சப் பணத்தை பகிா்ந்தளித்ததாக அமலாக்கத் துறை சந்தேகிக்கிறது. இவ்வழக்கில் கடந்த மாதம் 4-ஆம் தேதி ரதுல் புரியை அமலாக்கத் துறையினா் கைது செய்தனா். பின்னா், அமலாக்கத் துறை காவலில் விசாரிக்கப்பட்ட அவா், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில், நீதிமன்றக் காவல் முடிந்து, தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை அவா் ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ற நீதிபதி அரவிந்த் குமாா், ரதுல் புரியின் நீதிமன்றக் காவலை அடுத்த மாதம் 2-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டாா்.

ரூ.354 கோடி வங்கி மோசடி வழக்கில், ரதுல் புரி, அவரது தந்தை தீபக் புரி, தாயாா் நீதா (கமல்நாத்தின் சகோதரி) உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com