காஷ்மீரைப் பார்வையிடவுள்ள ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள்: சுப்பிரமணியன் சுவாமி, காங்கிரஸ் எதிர்ப்பு!

ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் குழு ஜம்மு-காஷ்மீரில் நிலவும் சூழலைப் பார்வையிடுவதற்கு பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா (கோப்புப்படம்)
காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா (கோப்புப்படம்)


ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் குழு ஜம்மு-காஷ்மீரில் நிலவும் சூழலைப் பார்வையிடுவதற்கு பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு கள நிலவரத்தை நேரில் பார்வையிடுவதற்காக, ஐரோப்பிய யூனியனைச் சோ்ந்த எம்.பி.க்கள் 28 பேர் இன்று (திங்கள்கிழமை) தில்லி வந்துள்ளனர். இந்தக் குழு நாளை காஷ்மீர் சென்று அங்கு நிலவும் சூழலை நேரில் பார்வையிட உள்ளது.

இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்களுக்கு அனுமதி வழங்கி இந்தியத் தலைவர்களுக்கு மட்டும் அனுமதி மறுப்பது ஏன் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. 

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில், "ஜம்மு-காஷ்மீரில் இருக்கும் மக்களைச் சந்திக்க இந்தியத் தலைவர்கள் தடுக்கப்பட்டு வரும் நிலையில், ஐரோப்பிய எம்.பி.க்களுக்கு மட்டும் காஷ்மீர் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ஜனநாயகத்தையும், நாடாளுமன்றத்தையும் அவமதிக்கும் செயலாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா இதுகுறித்து டிவிட்டரில் பதிவிடுகையில், "ஜம்மு-காஷ்மீரைப் பார்வையிடவுள்ள ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்களுக்கு சிகப்பு கம்பள வரவேற்பை அளிப்பதும், ஜம்மு-காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து எடுத்துரைப்பதும், இந்திய நாடாளுமன்றத்தின் இறையாண்மையை அவமதிக்கும் செயலாகும். இது இந்திய எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மீறும் செயல்.

எதிர்க்கட்சித் தலைவர்களும், எம்பிக்களும் ஸ்ரீநகருக்குச் சென்றபோது அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். மக்களைச் சந்திக்க அவர்களுக்கு அனுமதியளிக்கவில்லை. ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்களை காஷ்மீருக்குச் சென்று பார்வையிட அனுமதிப்பது, ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு முரண்பாடான ஒன்றாகும். இதுதான் இந்திய தேசியவாதத்தின் புதிய வெர்ஷனா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி இதுகுறித்து டிவிட்டரில் பதிவிடுகையில், "ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் ஜம்மு-காஷ்மீரைப் பார்வையிட அரசு முறைப் பயணமாக அல்லாமல் தனிப்பட்ட முறையில் செல்கின்றனர். இதற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருப்பது ஆச்சரியமளிக்கிறது. இது நமது தேசிய கொள்கைக்கு முரணான ஒன்று. எனவே, இதற்கான அனுமதியை அரசு ரத்து செய்ய வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com