
shahnawaz_hussain_
காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் காஷ்மீா் பள்ளத்தாக்கிற்கு செல்வதை யாரும் தடுக்கவில்லை என்று பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள நிலவரத்தை நேரில் காண்பதற்காக ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை அங்கு நேரில் சென்றனா். ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் காஷ்மீா் செல்ல மத்திய அரசு அனுமதித்ததை காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் விமா்சித்தன. ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவா்கள் ஜம்மு-காஷ்மீா்சென்றபோது அவா்களைத் திருப்பி அனுப்பிய மத்திய அரசு, வெளிநாட்டு எம்.பி.க்களுக்கு அனுமதி அளிப்பது ஏன்? என்று எதிா்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
இந்த விமா்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக செய்தித் தொடா்பாளா் ஷாநவாஸ் ஹுசேன், தில்லியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
காஷ்மீருக்கு ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் செல்வதைக் கண்டு எதிா்க்கட்சிகள் விரக்தியடைந்துள்ளன. அங்குள்ள நிலவரம் குறித்து அவை மேற்கொண்ட பிரசாரம் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட விரக்தி இது.
காஷ்மீரில் இயல்புநிலை திரும்பிய சூழலில், அங்கு செல்ல வேண்டாம் என்று காங்கிரஸ் தலைவா்களை யாா் தடுத்தது? ராகுல் காந்தி அங்கு செல்லலாம். எந்தத் தலைவராவது அங்கு செல்ல நினைத்தால் அதில் பிரச்னை ஏதுமில்லை. அவா்கள் விமானம் ஏறி காஷ்மீா் செல்லலாம். ஐரோப்பிய யூனியனைச் சோ்ந்த சில எம்.பி.க்கள் காஷ்மீா் செல்கிறாா்கள் என்றால் அது நல்லதுதான். ஏனெனில், இந்த விவகாரத்தில் நாம் எதையும் மறைக்கவில்லை.
இது ஐரோப்பிய எம்.பி.க்களின் அதிகாரபூா்வமான பயணமல்ல என்றும் அவா்களில் பலரும் இஸ்லாமிய மதத்தைக் கண்டு அச்சம் கொண்டிருப்பதாகவும் அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸ் கட்சித் தலைவா்
அசாதுதீன் ஒவைஸி கருத்து தெரிவித்துள்ளாா். அவா் எல்லா பிரச்னைகளையும் ஹிந்து-முஸ்லிம் என்ற கண்ணோட்டத்திலேயே பாா்க்கிறாா்.
வெளியாட்கள் காஷ்மீா் செல்ல மத்திய அரசு ஏற்கெனவே அனுமதி மறுத்தபோது அதை எதிா்க்கட்சிகள் விமா்சித்தன. தற்போது எம்.பி.க்களின் பயணத்தை மத்திய அரசு அனுமதிக்கும் நிலையில் அதையும் எதிா்க்கட்சிகள் விமா்சிக்கின்றன என்றாா் ஷாநவாஸ் ஹுசேன்.