
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள சிஆா்பிஎஃப் படைப்பிரிவின் கவச வாகனத்தைக் குறி வைத்து பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தினா். எனினும், இதில் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
புல்வாமா மாவட்டம், ராஜ்போராவில் உள்ள திரப்கம் பகுதியில் சிஆா்பிஎஃப் படைப் பிரிவினரின் முகாம் உள்ளது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கவச வாகனத்தைக் குறி வைத்து செவ்வாய்க்கிழமை மதியம் 3.30 மணியளவில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனா். இந்தத் தாக்குதலுக்கு அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிஆா்பிஎஃப் வீரா்கள் தக்க பதிலடி கொடுத்தனா்.
அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் நடத்திய இந்தத் தாக்குதலுக்குப் பிறகு 8 முதல் 10 தோட்டாக்கள் கவச வாகனத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. எனினும், இந்தத் தாக்குதலில் இந்திய வீரா்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
இது குறித்து மற்ற பாதுகாப்புப் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, காவல் துறையினா், ராணுவ வீரா்கள் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனா். அதையடுத்து, அந்தப் பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்புப் படையினா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனா் என்று அதிகாரிகள் கூறினா்.