வேலையின்மையால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்: விடியோ பகிர்ந்த சந்திரபாபு நாயுடு

வேலையின்மையால் தற்கொலை செய்துகொண்டவர் அதற்கு முன் வெளியிட்ட விடியோப் பதிவை ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு பகிர்ந்துள்ளார். 
வேலையின்மையால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்: விடியோ பகிர்ந்த சந்திரபாபு நாயுடு

வேலையின்மையால் தற்கொலை செய்துகொண்டவர் அதற்கு முன் வெளியிட்ட விடியோப் பதிவை ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு பகிர்ந்துள்ளார். இந்த விடியோப் பதிவு ஆந்திர மாநிலம் முழுவதும் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு மற்றும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது விமர்சனத்தை எழுப்பியுள்ளது.

கட்டுமானத் தொழிலாளியாக பணிசெய்து வந்த போலபல்லி வெங்கடேஸ்வரலு (29), குண்டூர் மாவட்டம் கொரண்டலா பகுதியைச் சேர்ந்தவர். இவர் கடந்த அக்டோபர் 02-ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அதற்கு முன்பு அவர் வெளியிட்ட விடியோப் பதிவு ஞாயிற்றுக்கிழமை முதல் பரவி ஆந்திராவில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

அதில், கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக வேலைவாய்ப்பின்மையால் அவதிப்பட்டு வருகிறேன். கட்டுமானத்துறையில் வேலை இல்லாததால் மாற்று வேலைவாய்ப்பும் கிடைக்கவில்லை. எனது குடும்பத்தை காப்பாற்ற முடியாத சூழ்நிலையில் உள்ளேன். இந்த மனவேதனை தாங்க முடியவில்லை. எனவே தற்கொலை செய்துகொள்கிறேன் என்று பேசியுள்ளார். 

இந்நிலையில், இந்த விடியோப் பதிவை பகிர்ந்துள்ள ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, ஆளும் ஜெகன் மோகன் ரெட்டி அரசு மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். வேலையின்மை மற்றும் பசியால் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டிருப்பது மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இனியாவது அரசு விழித்துக்கொண்டு தொழிலாளர்களுக்கு உரிய உதவித்தொகை அளிக்க வேண்டும். போதிய மணல் இல்லாத காரணத்தால் தான் கட்டுமானத்தொழில் தடைப்பட்டுள்ளது என்று சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.

நவம்பர் 3-ஆம் தேதி விசாகப்பட்டிணத்தில் இருந்து பேரணி அறிவித்துள்ள பிரபல தெலுங்கு நடிகரும், ஜன சேனா கட்சித் தலைவருமாந பவன் கல்யாண், தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படும் தோல்வியுற்ற ஆளும் அரசுக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து இந்த பேரணியில் கலந்துகொண்டு போராட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.150 கூட ஊதியம் கிடைப்பதில்லை. இதுதான் 151 எம்எல்ஏ-க்களை மக்கள் பெற்றுத்தந்ததற்கு ஒய்எஸ்ஆர் அரசு வழங்கும் பரிசு. ஏனென்றால் மாநிலத்திலுள்ள அனைத்து கட்டடங்களையும் தங்கள் கட்சி வண்ணத்தில் மாற்ற மட்டும் தான் அவர்களுக்கு நேரம் சரியாக உள்ளது என ஆந்திர பாஜக தலைவர் கண்ணா லட்சுமி நாராயணா விமர்சித்துள்ளார்.

இந்நிலையில், தொடர் மழை காரணமாக கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் தான் மணல் எடுக்க முடியவில்லை. இதனால் தான் மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளன. மற்றபடி ஆளும் கட்சி வேண்டுமென்ற மணலை பதுக்கி வைத்திருப்பதாக எதிர்கட்சிகள் கூறி வரும் விமர்சனங்கள் ஆதராமற்ற பொய் என ஒய்எஸ்ஆர் எம்எல்ஏ ஜோகி ரமேஷ் கூறியுள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com