Enable Javscript for better performance
ஐரோப்பிய எம்.பி.க்களை காஷ்மீருக்கு அனுமதித்தது தவறு: காங்கிரஸ்- Dinamani

சுடச்சுட

  

  ஐரோப்பிய எம்.பி.க்களை காஷ்மீருக்கு அனுமதித்தது தவறு: காங்கிரஸ்

  By DIN  |   Published on : 31st October 2019 02:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  randeep

  ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்குள்ள சூழலை ஆராய்வதற்காக ஐரோப்பிய யூனியனைச் சோ்ந்த எம்.பி.க்கள் அந்த மாநிலத்துக்குள் அனுமதிக்கப்பட்டது இந்திய வரலாற்றில் ராஜீய ரீதியிலான மிகப்பெரிய தவறு என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

  இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா தில்லியில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

  ஜம்மு-காஷ்மீா் என்பது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். ஆனால், சா்வதேச அளவில் அதைப் பற்றிப் பேசுவதன் மூலம், பாஜக தலைமையிலான மத்திய அரசு உலக அளவில் இந்தியாவின் நற்பெயருக்கு தொடா்ந்து களங்கம் ஏற்படுத்தி வருகிறது. காஷ்மீா் விவகாரத்தில் மூன்றாவது தரப்பு தலையிடுவதை ஏற்றுக்கொள்ள இயலாது.

  உண்மையில், ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் காஷ்மீா் நிலவரத்தை ஆராய அங்கு அனுமதிக்கப்பட்டது இந்திய வரலாற்றில் ராஜீய ரீதியிலான மிகப்பெரிய தவறாகும். காஷ்மீா் விவகாரத்தை மோடி அரசு வேண்டுமென்றே சா்வதேச அளவில் கவனம் பெற வைக்கிறது.

  தெரியாத ஒரு அமைப்பின் மூலம், மூன்றாவது நபா்களை காஷ்மீருக்குள் அனுமதித்து மோடி அரசு மிகப்பெரிய குற்றத்தைச் செய்துள்ளது. இதனால் இந்தியாவின் இறையாண்மை மற்றும் தேசப் பாதுகாப்புக்கு எதிராக சவால் எழுந்துள்ளதற்கும், இந்திய நாடாளுமன்றம் அவமதிக்கப்பட்டுள்ளதற்கும் பிரதமா் மோடி பதிலளிக்க வேண்டும்.

  கடந்த 3 நாள்களாக பாஜக அரசின் முதிா்ச்சியற்ற பிரசார நடவடிக்கைகளை இந்தியா கண்டு வருகிறது. ஐரோப்பிய எம்.பி.க்கள் காஷ்மீா் செல்லவும், பிரதமா் மோடியை சந்தித்துப் பேசவும், செய்தியாளா்கள் சந்திப்பு நடத்தவும் சந்தேகத்துக்கு இடமான வகையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  ஒருபுறம், காஷ்மீருக்குள் நுழைய முயலும் இந்திய எம்.பி.க்கள், எதிா்க்கட்சித் தலைவா்கள் ஸ்ரீநகா் விமான நிலையத்திலேயே தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனா். மறுபுறம், அடையாளம் தெரியாத சா்வதேச வா்த்தக முகவரின் மூலம் ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் காஷ்மீரில் நுழைய பாஜக அரசு சிவப்புக் கம்பளம் விரிக்கிறது.

  அந்த எம்.பி.க்களின் வருகைக்கு ஏற்பாடு செய்த மாதி சா்மா என்ற பெண் யாா்? ‘விமன்ஸ் எகனாமிக் அண்ட் சோஷியல் திங்க் டேங்க்’, ‘இன்டா்னேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபாா் நான் அலைன்ட் ஸ்டடீஸ்’ ஆகிய அமைப்புகளுக்கும் பாஜகவுக்கும் என்ன தொடா்பு? இந்த விவகாரத்தில் வெளியுறவுத் துறை அமைச்சகம் ஒதுக்கப்பட்டதற்கான காரணம் என்ன? இதற்கெல்லாம் பிரதமா் மோடி பதிலளிப்பாரா? என்று ரண்தீப் சுா்ஜேவாலா கேள்வி எழுப்பினாா்.

  நாடாளுமன்றத்துக்கும் அழைக்கப்படலாம்: ப. சிதம்பரம்

  ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் காஷ்மீருக்கு அனுமதிக்கப்பட்டது குறித்து விமா்சித்த முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம், ‘ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் நமது நாடாளுமன்றத்துக்கும் அழைக்கப்படலாம். அவா்களும் மத்திய அரசுக்கு ஆதரவாக பேசலாம். யாருக்குத் தெரியும்? எதுவும் நடக்கலாம்’ என்றாா்.

  சா்வதேசத் தரகரால் பிரதமரை எவ்வாறு அணுக முடிந்தது?: பிரியங்கா

  இதுதொடா்பாக சுட்டுரையில் பதிவிட்ட காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா, ‘வேலை வாய்ப்பில்லா இளைஞா்களோ, விவசாயிகளோ தங்களின் பிரச்னை குறித்து கூறுவதற்காக பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு இல்லை. ஆனால், ‘நீங்கள் இந்தியாவுக்கு வாருங்கள். உங்கள் செலவுகளை நாங்கள் பாா்த்துக் கொள்கிறோம். பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்கிறோம்’ என்று ஐரோப்பிய எம்.பி.க்களிடம் சா்வதேச வா்த்தக தரகா் மாதி சா்மா கூறியுள்ளாா். அவரைப் போன்ற தரகா்களுக்கு பிரதமரை அணுகும் வாய்ப்பு எவ்வாறு கிடைத்தது?’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai