இது உயர் சாதியினருக்குச் சொந்தமான கோயில்: தலித் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட அவலம்!

உத்தரப் பிரதேசத்தில் கோயில் ஒன்றில் நுழைய தலித் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது உயர் சாதியினருக்குச் சொந்தமான கோயில்: தலித் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட அவலம்!


உத்தரப் பிரதேசத்தில் கோயில் ஒன்றில் நுழைய தலித் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷார் மாவட்டத்தில் தலித் பெண்கள் சிலர் கோயிலுக்குள் நுழைய முயன்றுள்ளனர். ஆனால், அவர்களுடைய சாதியைக் காரணம் காட்டி அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்கள். இதுதொடர்பான விடியோ நேற்று (புதன்கிழமை) முதல் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி நடைபெற்றுள்ளது. ஆனால், இதுதொடர்பான விடியோ மட்டுமே நேற்று முதல் வைரலாகி வருகிறது. அந்த விடியோ 6 நிமிடங்களைக் கொண்டுள்ளது.

அந்த விடியோவில் கருப்புச் சட்டை அணிந்த ஆண் ஒருவர் பூட்டப்பட்ட வாயிற்கதவுகள் முன் நின்றுகொண்டிருக்கிறார். அப்போது, கோயிலுக்குச் சென்று தரிசனம் மேற்கொள்ள தாங்கள் தடுக்கப்படுவது ஏன் என பெண்கள் சிலர் கேள்வி எழுப்புவது விடியோவில் கேட்கிறது. மேலும் சிலர், "பெண்களுக்கும் தரிசனம் மேற்கொள்ள உரிமை இருக்கிறது. கோயில் கதவுகள் திறக்கும் வரை இந்த இடத்தில் இருந்து நகர மாட்டோம்" என்று கூறுகின்றனர்.

அதேசமயம், "எங்களை ஏன் இங்கேயே கொலை செய்யக் கூடாது? நாங்கள் இந்த இடத்திலேயே செத்து மடிகிறோம். லத்திகளை கொண்டு வாருங்கள்.. நாங்கள் தொடர்ந்து இங்கேயேதான் இருப்போம். ஒட்டுமொத்த கிராமத்தையும் அழையுங்கள். அவர்களும் இதைப் பார்க்கட்டும்" என்று ஒரு பெண் பேசுவதும் அந்த விடியோவில் கேட்கிறது.

இதன்பிறகு அந்த விடியோவில், "இந்த நிலம் தாகுர்களுக்குச் சொந்தமானது. பிராமணர்களும், தாகுர்களும் மட்டுமே இங்கு காலம் காலமாக பிரார்த்தனை செய்து வருகின்றனர்" என்று அந்த ஆண் பெண்களிடம் தெரிவிப்பது கேட்கிறது.

இதையடுத்து, கேமிரா கோயிலை நோக்கி ஸூம் (ZOOM) செய்யப்படுகிறது. அதில் வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்த ஆண் ஒருவர், கோயிலின் பிரதானக் கதவை மூடிவிட்டு, வாயிற்கதவை நோக்கி வந்துகொண்டிருக்கிறார். அந்த இரண்டு ஆண்களும் வாயிற்கதவுகள் முன் நின்று செல்போன்களை கோபத்துடன் பார்த்தபடி நிற்கின்றனர். பெண்களும் கோயிலுக்குள் அனுமதிக்குமாறு கூச்சலிடுகின்றனர்.

இந்த வாக்குவாதம் மேலும் தொடர, பெண்களை கோயிலுக்குள் அனுமதிப்பதற்கு அந்த ஆண்கள் தங்களது எதிர்ப்புகளை இன்னும் வீரியமாக வெளிப்படுத்துகின்றனர். அந்த விடியோவில் கோயிலின் வாயிற்கதவு அருகே சுமார் 15 பெண்கள், பள்ளி குழந்தைகளுடன் கோபத்துடன் நிற்கின்றனர்.

இதையடுத்து, விஜேந்தர் சிங் வால்மீகி தலித் பெண்கள் சார்பாக போலீஸிடம் புகார் அளித்திருக்கிறார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், "இந்த மக்கள் அங்கு சென்று பிரார்த்தனை செய்வது வழக்கம். ஆனால், கடந்த வாரம் சில ஆண்கள், இவர்கள் தலித் என்பதைக் காரணம் காட்டி கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்" என்றார்.

இதுதொடர்பாக விடியோ எடுக்கப்பட்ட தினத்தன்று தலித்துகள் மீது தாக்குதல் நடத்திய குற்றத்துக்காக அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீஸார் கடந்த 25-ஆம் தேதி எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புலந்த்ஷார் மாவட்ட கூடுதல் எஸ்பி அதுல் ஸ்ரீவஸ்தவா தெரிவிக்கையில், "நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். விடியோவில் இருக்கும் உண்மைத் தன்மையை ஆய்வு செய்து வருகிறோம். இதன்பிறகு இந்த வழக்கில் மேற்கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com