காற்றாலை மோசடி வழக்கு: நடிகை சரிதா நாயா் உள்பட மூவருக்கு 3 ஆண்டுகள் சிறை!

காற்றாலை மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயர் உள்பட மூவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் கோவை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
காற்றாலை மோசடி வழக்கு: நடிகை சரிதா நாயா் உள்பட மூவருக்கு 3 ஆண்டுகள் சிறை!


காற்றாலை மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயர் உள்பட மூவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் கோவை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் நடிகை சரிதா நாயர். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு கோவை வடவள்ளியில் ஐசிஎம்எஸ் என்ற பெயரில் காற்றாலை உபகரணங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்தார். காற்றாலை அமைத்துத் தருவதாகக் கூறி இவர், கோவையைச் சேர்ந்த தியாகராஜன் மில்ஸ் நிறுவனத் தலைவர் தியாகராஜனிடம் ரூ.26 லட்சம், ஊட்டியைச் சேர்ந்த ஸ்ரீஅபு பாபாஜி அறக்கட்டளை நிர்வாகிகள் வெங்கட்ரமணன் மற்றும் ஜோயோவிடம் ரூ.7 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. 

இதன் அடிப்படையில் சரிதா நாயர், அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகியோர் மீது போலீஸார் மோசடி வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கோவை மாவட்ட நீதித்துறை நடுவர் மன்றத்தில் (எண்.6) விசாரிக்கப்பட்டு வந்தது. 

வழக்கு விசாரணை நடைபெற்று வந்த போதே தனது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணனை, சரிதா நாயர் விவாகரத்து செய்தார். 

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை 2017ஆம் ஆண்டு தொடங்கியது. பின்னர் இறுதிகட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதித்துறை நடுவர் கே.ஆர்.கண்ணன் வியாழக்கிழமைப் பிறப்பித்தார். 

அதில், மோசடி வழக்கில் சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கே.ஆர். கண்ணன் தீர்ப்பளித்தார். 

இந்நிலையில், இந்த வழக்கில் தான் ஏற்கெனவே சிறையில் இருந்ததால் அந்தக் காலத்தைத் தண்டனைக் காலத்தில் கழிக்க வேண்டும் என்று கோரி சரிதா நாயரின் முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் அதே நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதித்துறை நடுவர் கே.ஆர். கண்ணன், அவரது மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் மேல்முறையீடு செய்வதற்காக தங்களது தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி நீதித்துறை நடுவரிடம் மனு அளித்தனர். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதித்துறை நடுவர், மூன்று பேரின் தண்டனையையும் நவம்பா்14 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com