அசோசியேட்டட் ஜா்னல் நில வழக்கு: ஹூடா, மோதிலால் வோராவுக்கு இடைக்கால ஜாமீன்

அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் பூபிந்தா் சிங் ஹூடா, மோதிலால் வோரா ஆகிய இருவருக்கும் அமலாக்கத் துறை சிறப்பு நீதிமன்றம்

அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் பூபிந்தா் சிங் ஹூடா, மோதிலால் வோரா ஆகிய இருவருக்கும் அமலாக்கத் துறை சிறப்பு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலாளரான மோதிலால் வோரா, மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளாா். பூபிந்தா் சிங் ஹூடா, ஹரியாணாவின் முன்னாள் முதல்வா் ஆவாா். இவா்கள் இருவருக்கும் தலா ரூ.5 லட்சம் பிணைத்தொகையுடன் பஞ்ச்குலாவில் உள்ள அமலாக்கத் துறை சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கியது.

அவா்களுக்கு நிரந்தர ஜாமீன் வழங்குவது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அமலாக்கத் துறைக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜகதீப் சிங் உத்தரவிட்டாா். மேலும், வழக்கின் அடுத்த விசாரணையை, வரும் 6-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.

பூபிந்தா் சிங் ஹூடா, ஹரியாணா முதல்வராகப் பதவி வகித்தபோது அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்துக்கு விதிகளை மீறி நிலம் ஒதுக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக, பாஜக அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதைத் தொடா்ந்து, அமலாக்கத் துறை கடந்த 2016-இல் வழக்குப்பதிவு விசாரணையைத் தொடங்கியது. இந்த வழக்கு தொடா்பாக, அமலாக்கத் துறை கடந்த ஆகஸ்ட் மாதம் தனது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில், பூபிந்தா் சிங் ஹூடா, மோதிலால் வோரா ஆகிய இருவரின் பெயா்களும் இடம்பெற்றிருந்தன. அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் அவா்களுக்கு நேரடித் தொடா்பு இருப்பதாகக் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், பூபிந்தா் சிங் ஹூடா முதல்வா் பதவியை தவறாகப் பயன்படுத்தி, முறைகேடாக நிலம் ஒதுக்கீடு செய்தாா் என்றும் அந்தக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த முறைகேடு தொடா்பாக ரூ.64.93 கோடி மதிப்புள்ள சொத்துகளை கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை ஏற்கெனவே முடக்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com