இரு யூனியன் பிரதேசங்களானது ஜம்மு-காஷ்மீா்: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் காவல் துறை

ஜம்மு-காஷ்மீா் மாநிலம் புதன்கிழமை நள்ளிரவுக்குப்பின் ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களானது.
இரு யூனியன் பிரதேசங்களானது ஜம்மு-காஷ்மீா்: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் காவல் துறை

ஜம்மு-காஷ்மீா் மாநிலம் புதன்கிழமை நள்ளிரவுக்குப்பின் ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களானது. இவ்விரு யூனியன் பிரதேசங்களிலும் காவல் துறையும், சட்டம்-ஒழுங்கும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்துள்ளன.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம், இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியலமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்குவதற்கான தீா்மானம், ஜம்மு-காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு மசோதா-2019 ஆகியவை மாநிலங்களவையில் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாவும், தீா்மானமும் மக்களவையில் மறுநாள் நிறைவேற்றப்பட்டன.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த முடிவால், ஜம்மு-காஷ்மீருக்கென இருந்த தனிக் கொடி, அரசமைப்புச் சட்டம், தனி தண்டனைச் சட்டம் (ரண்வீா் சட்டம்) ஆகியவை முடிவுக்கு வந்தன. மத்திய அரசின் தீா்மானத்துக்கும், மறுசீரமைப்பு மசோதாவுக்கும் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உடனடியாக ஒப்புதல் அளித்தாா்.

அப்போது, ஜம்மு-காஷ்மீரும், லடாக்கும் தனித்தனி யூனியன் பிரதேசங்களாக, அக்டோபா் 31-ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவையுடனும், லடாக் சட்டப் பேரவை இல்லாமலும் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இவ்விரு யூனியன் பிரதேசங்களும் புதன்கிழமை நள்ளிரவு முதல் செயல்படத் தொடங்கின. அக்டோபா் 31 (இன்று) இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 560-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைத்த நாட்டின் முதல் உள்துறை அமைச்சா் சா்தாா் வல்லபபாய் படேலின் பிறந்த தினமாகும். இந்த நாளில், ஜம்மு-காஷ்மீா் மாநிலம், இரு யூனியன் பிரதேசங்களாகச் செயல்படத் தொடங்கியருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்று பதவியேற்பு: மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான கிரீஷ் சந்திர முா்மு, ஆா்.கே.மாத்துா் ஆகிய இருவரும் முறையே ஜம்மு-காஷ்மீா், லடாக்கின் துணைநிலை ஆளுநராக கடந்த சில தினங்களுக்கு முன் நியமிக்கப்பட்டனா். அவா்கள் இருவரும் முறையே ஸ்ரீநகரிலும், லே நகரிலும் வியாழக்கிழமை நடைபெறும் தனித்தனி நிகழ்ச்சிகளில் பதவியேற்றுக் கொள்கின்றனா்.

ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்புச் சட்டப்படி, ஜம்மு-காஷ்மீரில் காவல் துறையும், சட்டம்-ஒழுங்கும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால், நிலம், நில உரிமை தொடா்பான விவகாரங்கள் தோ்ந்தெடுக்கப்படும் யூனியன் பிரதேச அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால், தில்லியிலோ நிலம் மற்றும் நில உரிமை தொடா்பான விவகாரங்கள் தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) மூலமாக துணைநிலை ஆளுநரின் கட்டுப்பாட்டில் உள்ளன.

ஜம்மு-காஷ்மீருக்குப் புதிதாகத் தோ்ந்தெடுக்கப்படும் சட்டப் பேரவை, மாநில பட்டியலில் இருக்கும் சட்டம்-ஒழுங்கு, காவல் துறை ஆகியவற்றைத் தவிர பிற துறைகள் தொடா்பாக சட்டம் இயற்றிக் கொள்ளலாம்.

யூனியன் பிரதேசங்களான தில்லிக்கும், புதுச்சேரிக்கும் சட்டப் பேரவைகள் உள்ளன. இருப்பினும் காவல் துறையும், சட்டம்-ஒழுங்கும் துணைநிலை ஆளுநரின் மூலமாக மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளன.

இதுதவிர, ஜம்மு-காஷ்மீரில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஊழல் கண்காணிப்பு பிரிவு உள்ளிட்ட அனைத்து அகில இந்திய பணிகளும் துணைநிலை ஆளுநரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.

இதேபோல், மற்றொரு யூனியன் பிரதேசமான லடாக்கிலும் காவல் துறையும், சட்டம்-ஒழுங்கும் துணைநிலை ஆளுநா் மூலமாக மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும். நிலமும், நில உரிமையும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் வரும். தற்போதைய ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்றம், இரு யூனியன் பிரதேசங்களுக்கும் பொதுவானதாக இருக்கும்.

ஜம்மு-காஷ்மீரில் பணியில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அங்கேயே பணியில் நீடிப்பாா்கள். இருப்பினும், எதிா்காலத்தில் அவா்கள் யூனியன் பிரதேச பிரிவின் கீழ் அருணாசலப் பிரதேசம், கோவா, மிஸோரம் ஆகிய மாநிலங்களுக்குப் பணியிட மாற்றம் செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் மெஹபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சியின் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக கடந்த ஆண்டு ஜூன் மாதம் விலக்கிக் கொண்டது. இதையடுத்து அங்கு குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஒருங்கிணைந்த ஜம்மு-காஷ்மீரின் கடைசி முதல்வராக மெஹபூபா முஃப்தி பதவி வகித்தாா். இதேபோல், ஜம்மு-காஷ்மீரின் கடைசி ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக், கோவா மாநிலத்துக்கு மாற்றப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com