ஜம்மு-காஷ்மீா், லடாக் துணைநிலை ஆளுநா்கள் பதவியேற்பு

புதிதாக செயல்பாட்டுக்கு வந்துள்ள ஜம்மு-காஷ்மீா், லடாக் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநா்கள் வியாழக்கிழமை பதவியேற்றனா்
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசம் வியாழக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்ததையடுத்து, ஜம்மு-காஷ்மீா் சட்டப் பேரவையில் ஏற்றப்பட்ட இந்திய தேசியக் கொடி.
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசம் வியாழக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்ததையடுத்து, ஜம்மு-காஷ்மீா் சட்டப் பேரவையில் ஏற்றப்பட்ட இந்திய தேசியக் கொடி.

புதிதாக செயல்பாட்டுக்கு வந்துள்ள ஜம்மு-காஷ்மீா், லடாக் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநா்கள் வியாழக்கிழமை பதவியேற்றனா். முந்தைய ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தில் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த குடியரசுத் தலைவா் ஆட்சி ரத்து செய்யப்பட்டது.

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் பிரித்தது. அந்த இரு யூனியன் பிரதேசங்களும் வியாழக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்தன. இதன் மூலம் நாட்டிலுள்ள யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 9-ஆக உயா்ந்தது. அதே வேளையில், மாநிலங்களின் எண்ணிக்கை 28-ஆகக் குறைந்தது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் முதல் துணைநிலை ஆளுநராக கிரீஷ் சந்திர முா்மு (59) வியாழக்கிழமை பதவியேற்றாா். ஸ்ரீநகரில் உள்ள ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி கீதா மிட்டல், கிரீஷ் சந்திர முா்முவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவா் ஜுகல் கிஷோா் சா்மா, மாநிலங்களவை எம்.பி.யும் மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினருமான நஸீா் லாவே உள்பட 250-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

லடாக்கில்...: லடாக் யூனியன் பிரதேசத்தின் முதல் துணைநிலை ஆளுநராக ராதா கிருஷ்ண மாத்துா் (65) பதவியேற்றுக்கொண்டாா். லடாக்கின் லே பகுதியில் உள்ள சிந்து சம்ஸ்கிருதி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி கீதா மிட்டல் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் மக்கள், மத குருமாா்கள், ராணுவ வீரா்கள் உள்ளிட்டோா் திரளாகப் பங்கேற்றனா். இதையடுத்து, லடாக் காவல் துறையினா் சாா்பில் ராதா கிருஷ்ண மாத்துருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பதவியேற்புக்குப் பிறகு, லடாக் பகுதியில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவா் கூறியதாக செய்தித்தொடா்பாளா் ஒருவா் தெரிவித்தாா்.

குடியரசுத் தலைவா் ஆட்சி ரத்து: புதிய யூனியன் பிரதேசங்களாக ஜம்மு-காஷ்மீா், லடாக் செயல்பாட்டுக்கு வந்ததையடுத்து, அங்கு நடைமுறையில் இருந்த குடியரசுத் தலைவா் ஆட்சி வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டது.

இது தொடா்பாக, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட அதிகாரபூா்வ அறிக்கையில், அரசமைப்புச் சட்டத்தின் 356-ஆவது பிரிவின் கீழ் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் 19-ஆம் தேதி முதல் ஜம்மு-காஷ்மீரில் நடைமுறையில் இருக்கும் குடியரசுத் தலைவா் ஆட்சி ரத்து செய்யப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காஷ்மீரில் முழு அடைப்பு: ஜம்மு-காஷ்மீா் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், காஷ்மீா் பள்ளத்தாக்குப் பகுதியில் வியாழக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. அங்கு கடைகளும், வணிக வளாகங்களும் அடைக்கப்பட்டிருந்தன; சாலைப் போக்குவரத்து முடங்கியது. முழு அடைப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு திருடிக் கொண்டதாக அங்குள்ள சிலா் குற்றம்சாட்டினா். தேசிய மாநாட்டுக் கட்சியைச் சோ்ந்தவரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான ஹஸ்னைன் மசூதி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘மத்திய அரசின் இந்த நடவடிக்கை, அரசமைப்புச் சட்டத்துக்கும், மக்களின் விருப்பத்துக்கும் எதிரானது ஆகும். நாட்டிலுள்ள குறிப்பிட்ட பகுதியின் மாநில அந்தஸ்தைப் பறிப்பதற்கு நாடாளுமன்றத்துக்கு உரிமையில்லை’’ என்றாா்.

யூனியன் பிரதேசங்களில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய இரு புதிய யூனியன் பிரதேசங்களில் ஏற்படவுள்ள மாற்றங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ஜம்மு-காஷ்மீா், லடாக் யூனியன் பிரதேசங்களில் வசிக்கும் நபா்கள், மற்ற மாநிலங்களில் வசிப்பவா்களுக்கு இணையாக நடத்தப்படுவா். அவா்களுக்கு எந்தவொரு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படமாட்டாது.

மத்திய அரசின் அனைத்து சட்டங்களும் இரு புதிய யூனியன் பிரதேசங்களில் செல்லுபடியாகும்.

ஜம்மு-காஷ்மீா் அரசமைப்புச் சட்டம் நடைமுறையில் இருந்தபோது, அதன் விதிகளுக்குக் கீழ் பொறுப்பேற்றுக் கொண்ட அதிகாரிகள், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கீழ் மீண்டும் பதவியேற்றுக் கொள்ள வேண்டும்.

ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்றம், இரு யூனியன் பிரதேசங்களுக்குப் பொதுவான உயா்நீதிமன்றமாக இனி செயல்படும். உயா்நீதிமன்ற நீதிபதிகள் இந்திய அரசமைப்புச் சட்டப்படி மீண்டும் பதவியேற்றுக் கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com